Published : 12 Jan 2022 07:44 AM
Last Updated : 12 Jan 2022 07:44 AM
"அன்புள்ள சாய்னா மன்னித்துவிடுங்கள்; நீங்கள் எப்போதுமே சாம்பியன் தான்" என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட மன்னிப்புக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள சாய்னா,
நான் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நான் இதைவிட இரக்கம் கொண்டவனே.
நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன்.
அதேவேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை என்னைச் சாடுவோர் கூறுவதுபோல் மலினமான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே பெண்ணியவாதிகளின் ஆதரவாளர். ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ட்வீட்டை நான் பதிவு செய்யவில்லை.
இந்தப் பிரச்சினையை நாம் முடித்துக் கொண்டு முன்னேறலாம் என நினைக்கிறேன். நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான்.
நேர்மையுடன்
சித்தார்த்
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
ட்வீட், கண்டனம், மன்னிப்பு: கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
"எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இந்தப் பதிவை ஆபாசமான வார்த்தைகளால் அவரின் ட்விட்டரில் தெரிவித்ததை அடுத்து கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தமிழ் சினிமாவின் சின்மயி, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா போன்ற பலர் நடிகர் சித்தார்த்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கடிதம் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT