Published : 11 Jan 2022 12:01 PM
Last Updated : 11 Jan 2022 12:01 PM
புதுடெல்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகளை உருவாக்கும் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்கு காலக்கெடு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு டிசம்பர்-10ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தின்படி, “கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்” என்பதாகும்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நடைமுறைப்படுத்தவும், அமலாக்கம் செய்யவும் விதிமுறைகளை வகுக்கவில்லை. இதற்காக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு உருவாக்கப்பட்டது. இந்த விதிகளை உருவாக்க ஏற்கெனவே இந்தக் குழுவுக்கு இருமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, அந்தக் காலக்கெடு கடந்த 9-ம் தேதியோடு முடிந்துவிட்டது.
இந்நிலையில், மீண்டும் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, மாநிலங்களவை, மக்களவைத் தலைவருக்கு மத்திய உள்துறைஅமைச்சகம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது. ஒருவேளை காலக்கெடு நீட்டிப்பு வழங்கினால் அது 3-வது முறையாக அவகாசமாகும்.
இதுகுறித்து மாநிலங்களவை அதிகாரி ஒருவர் கூறுகையில் “மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிஏஏ விதிகளை வகுக்கும் நாடாளுமன்றக் குழுவுக்கு காலக்கெடுவை நீட்டிக்க அவகாசம் கோரப்பட்டுள்ளது. அது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இந்தக் குழுவின் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பஞ்சாப் தேர்தலுக்காகச்சென்றுவிட்டார். விதிகளை வகுக்காமல் சட்டத்தை அமல்படுத்த முடியாது. மக்களவை ஏற்கெனவே கால அவகாசம் நீட்டித்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவை, மாநிலங்களவைக்கு தனித்தனியாக கோரிக்கை கடிதத்தை காலக்கெடு நீட்டிப்புக்காக அனுப்பியுள்ளது. இதற்கு முன் கடந்த 2021, ஏப்ரல் 9ம் தேதியும், 2021, ஜூலை 9ம் தேதியும் காலக்கெடு நீட்டிப்புக் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது.
ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற விதிகளை உருவாக்க முடியாவிட்டால், விதிகளை வகுக்க வேண்டியுள்ளதை காரணம் காட்டி, காலக்கெடுவை அதிகபட்சமாக 3 முறை மட்டுமே நீட்டிக்க முடியும். அந்த வகையில் 3-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட உள்ளது. கடந்த முறை விதிகளை வகுக்க 6 மாதங்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT