Published : 10 Jan 2022 01:47 PM
Last Updated : 10 Jan 2022 01:47 PM
பானாஜி : கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த மைக்கேல் லோபோ அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இன்று ராஜினாமா செய்தார்
"பாஜக - சாமானிய மக்களுக்கான கட்சி அல்ல. மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறேன்" என மைக்கேல் லோபோ தெரிவித்தார்
கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடக்கிறது.
கோவா மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆனால், தனிப்பெரும் 40 இடங்களில் 17 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் கட்சி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் என்ற விதி இருந்தது. ஆனால், இது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது எனக் கூறி, பாஜக மற்ற கட்சிகளுடன் பேரம் பேச ஆளுநர் வாய்ப்பளித்தார்.
பாஜக பெரும்பான்மை கிடைக்காமலும், தனிப்பெரும் கட்சியாக இல்லாத நிலையிலும் மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, சிறு கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி, சிறு கட்சிகளையும் உடைத்தது போன்ற செயல்களால் ஈடுபட்டது.
இந்நிலையில் கோவாவில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் கூட்டணி மாறும் படலம், கட்சித் தாவல் போன்ற சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. இந்த முறை காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என்சிபி, சிவசேனா ஆகிய கட்சிகள் களம் காண்பதால் கடும் போட்டியிருக்கும். பெரும்பான்மை கிடைப்பதிலும் இழுபறி நிலவலாம். கூட்டணி அமைவதைப் பொறுத்து இந்த முன்கணிப்பு மாறக்கூடும்.
இந்தச் சூழலில் கோவா பாஜகவைச் சேர்ந்த மைக்கேல் லோபோ தனது எம்எல்ஏ பதவி, அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். மைக்கேல் லோபோவின் விலகல் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவைத் தரும். இதனால் கோவாவில் பாஜகவின் பலம் 24 எம்எல்ஏவாகக் குறைந்துள்ளது.
மைக்கேல் லோபோ கடந்த சில மாதங்களாகவே முதல்வர் பிரமோத் சாவந்த்தையும், அரசையும் வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார். காலிங்கட் தொகுதி எம்எல்ஏவான லோபோ, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அடுத்ததாக காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். தேர்தலில் தனக்கு அல்லது தனது மனைவிக்கு சீட் கேட்டு வருகிறார்.
இதுகுறித்து மைக்கேல் லோபோ நிருபர்களிடம் கூறுகையில், “நான் அமைச்சர் பதவியிலிருந்தும், எம்எல்ஏ பதவியிலிருந்தும் விலகிவிட்டேன். பாஜகவிலிருந்தும் வெளியேறுவேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேசி வருகிறேன். நான் வாக்காளர்களைச் சந்தித்துப் பேசியபோதெல்லாம், பாஜக சாமானிய மக்களுக்கான கட்சி இல்லை என்றே தெரிவிக்கிறார்கள்.
எந்தக் கட்சியிலும் சேர்வது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை. எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன். மனோகர் பாரிக்கர் கட்டியமைத்தபாஜக இதுவல்ல. இருந்தாலும் நான் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிட்டாலும் பாஜகவினர் எனக்கு ஆதரவளிப்பார்கள். பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை நடத்தும் விதம் எனக்கு அதிருப்தியளித்தது. இதன் காரணமாகவே நான் விரைவில் பாஜகவிலிருந்து வெளியேறுவேன்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT