Last Updated : 10 Jan, 2022 09:25 AM

 

Published : 10 Jan 2022 09:25 AM
Last Updated : 10 Jan 2022 09:25 AM

முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி : இந்தியாவில் கரோனா வைரஸ் 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, முன்களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்துவது இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்தும், கரோனா 3-வது அலை உருவாகியிருப்பதையடுத்தும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும் என அறிவித்தார்.

பிரதமர் மோடி அறிவிப்பின், 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு இதுவரை 2 கோடி பேர் வரை தடுப்பூசி செலுத்திவிட்டனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி நாளை நாடுமுழுவதும் தொடங்க உள்ளது. இதற்கான பதிவு செய்தல் கோவின் தளத்தில் சனிக்கிழமை முதல் தொடங்கிவிட்டது. இதன்படி 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய்கள் இருப்போர், மருத்துவப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் கோவின் தளத்தில் தங்களைப் பதிவு செய்யலாம்.

பூஸ்டர் டோஸ் செலுத்த வருவோர் 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். அப்போதுதான் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த முடியும்.

3-வது தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய்கள் இருப்போர், முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி குறித்த குறுஞ்செய்திகளை கோவின் போர்டல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரில் ஒரு கோடி பேருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்துவது தொடர்பாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுவிட்டன. கோவின் தளம் மூலம் பதிவு செய்தல் தொடங்கிவிட்டது, தடுப்பூசி செலுத்துவது 10-ம் தேதி முதல் தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார.

இது தவிர தேர்தல் நடக்கும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள அதிகாரிகள், அரசுப்பணியாளர்கள், மருத்துவர்களும் முன்களப்பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1.05 சுகாதாரப்பணியாளர்கள், 1.90 கோடி முன்களப்பணியாளர்கள், 2.75 கோடி 60வயதுக்கு மேற்பட்ட இணைநோய்கள் இருப்போர் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியில் எந்த தடுப்பூசியும் கலந்து வழங்கப்படாது. அதாவது இரு டோஸ் தடுப்பூசி கோவிஷீல்ட் ஒருவர் செலுத்தியிருந்தால், பூஸ்டர் டோஸும் கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்படும்.

பூஸ்டர் டோஸ் செலுத்தவரும் முதியோருக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் எந்தவிதான புதிய பதிவும் தேவையில்லை. ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒருமுறை தங்கள் பதிவை முன்னெச்சரிக்கை டோஸ் பிரிவில் பதிவு செய்தால் போதுமானது.

60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியிருந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது, மருத்துவரிடம் எந்த சான்றிதழும் பெற்றுக் கொண்டு செல்லத் தேவையில்லை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x