Published : 09 Jan 2022 08:37 AM
Last Updated : 09 Jan 2022 08:37 AM

5 மாநிலத் தேர்தலில் பிரச்சாரக் கட்டுப்பாடு பிரதமருக்கும் பொருந்தும்; சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | கோப்புப்படம்


மும்பை : 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம்விதித்துள்ள கட்டுப்பாடுகள் பிரதமர் மோடிக்கும் பொருந்தும். அவர் இந்த விதிகளைக் கடைபிடித்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது. இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் 7 கட்டங்களாக வரும் பிப்ரவரி 10ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை தேர்தல் நடக்கிறது.

மணிப்பூரில் தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் பிப்ரவரி 27ம் தேதியும், 2-வது கட்டம் மார்ச் 3ம் தேதியும் நடக்கிறது.

மற்ற 3 மாநிலங்களான உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14்ம் தேதி தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம்தேதி வாக்கு எண்ணி்க்கை நடக்கிறது.

இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த மாநிலங்கள் தேர்தல் நடத்தை விதிகள்அமலுக்கு வந்துள்ளன. கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இந்த மாநிலங்களில் இருப்பதால், வரும் 15ம் தேதிவரை நேரடியாக எந்த அரசியல் கட்சியும் பிரச்சாரம் செய்யக்கூடாது, தேர்தல் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், சைக்கிள் பேரணிகள் என எதையும் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 15ம் தேதிக்குப்பின் சூழலை ஆய்வு செய்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த விதியை பிரதமர் மோடி கடைபிடித்து அனைவருக்கும் உதாரணமாகத் திகழ வேண்டும் என்று சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து சஞ்சய் ராவத் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

5 மாநிலத் தேர்தலிலும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு அனைவருக்கும் பொருந்தும், பிரதமர் மோடிக்கும் பொருந்தும். இந்த விதிகளை மதித்து நடந்து, மற்றவர்களுக்கு உதாரணமாக பிரதமர் மோடி இருக்க வேண்டும்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சில கட்சிகளும், அதன் தலைவர்களும் குறிப்பாக பாஜகவும் பிரதமர் மோடியும், கரோனா வைரஸ் பரவலைக் கூட கருத்தில் கொள்ளாமல் உச்சத்தில் பரவல் இருந்ததையும் நினைக்காமல் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இந்த முறை பிரதமர் மோடி உதாரணமாக இருக்க வேண்டும்.

உ.பி., கோவாவில் சில இடங்களில் போட்டியிட சிவசேனா கட்சி முடிவு செய்திருக்கிறது. தேசியவாதக் காங்கிரஸ்க ட்சியுடன் இணைந்து போட்டியிடும், காங்கிரஸ்கட்சியும் எங்களுடன் இருக்க விரும்புகிறோம்.

ஆனால், தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருக்கிறது. கோவாவில் காங்கிரஸ் கட்சி தனியாக வென்றுவிட்டால், அதற்கு எங்களின் வாழ்த்துக்கள். கோவாவில் காங்கிரஸுக்கு எதிராக பாஜக மட்டுமல்லாமல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

கோவாவில் ஒரு கிராமத்தில் கூட சிவசேனாவுக்கு கிராமத்தலைவர், கட்சி உறுப்பினர்கள் இல்லை என கோவா முதல்வர் பேசியுள்ளார். நான் கேட்கிறேன், சில ஆண்டுகளுக்கு முன் கோவாவில் ஏதாவது ஒரு கிராமத்தில் பாஜகவுக்கு கிராமத்தலைவர் இருந்தாரா, பின்னர் எப்படி ஆட்சியைப் பிடித்தீர்கள்.

மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியை உடைத்து அங்கிருந்து எம்எல்ஏக்களை விலைக்குவாங்கிதானே ஆட்சியைப் பிடித்தீர்கள். கோவா மக்கள் பாஜகவுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x