Published : 09 Jan 2022 07:40 AM
Last Updated : 09 Jan 2022 07:40 AM
கேரள மாநிலத்தின் மூணாறைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் எர்ணாக்குளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தார். அவருக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவரது 27-வது வயதில் குடும்பத்துக்காக வருவாயை பெருக்க இரவு, பகல் பார்க்காமல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் பணியைத் தொடர்ந்தார். அப்போதும் கூட தினமும் ரூ.500-தான் வருவாயாக கிடைத்தது.
இதனால் ஸ்ரீநாத் குடிமைப் பணி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தார். ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதியே பாதை காட்டியது. பணம் கட்டி பயிற்சி வகுப்புகளில் படிக்க இயலாத குடும்ப சூழலில் ஸ்ரீநாத் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கினார். அதில் தினமும் யூடியூப் வழியாகவும், இணையத் தேடலிலும் படிக்கத் தொடங்கினார்.
புத்தகங்களை வாங்கி படிக்க வசதியில்லாத நாத்துக்கு ரயில் நிலையத்தில் இருந்த இலவச வைஃபை இணையவாசலைத் திறந்துவிட்டது. இதனிடையில் ஸ்ரீநாத் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வென்று நில அளவைத் துறையில் சேர்ந்தார்.
ஆனாலும், அந்தப் பணியில் தொடர்ந்து கொண்டே தொடர்ந்து குடிமைப் பணிகள் தேர்வுக்கும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். இதுகுறித்து ஸ்ரீநாத் இந்து தமிழ் திசை நாளிதழிடம் கூறியதாவது: கூலியாக இருப்பதற்கும் உடல் தகுதித் தேர்வு உண்டு. அதில் வென்று, 5 ஆண்டுகள் எர்ணாக்குளம் ரயில் நிலையத்தில் கூலியாக இருந்தேன். டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக ரயில் நிலையத்தில் வைஃபை வசதி வந்தது. கூலி வேலையில் ரயில் வரும் போது மட்டுமே வேலை இருக்கும். மற்ற நேரங்களில் பொழுது போகாமல்தான் அமர்ந்திருப்போம்.
அப்போதுதான் படிக்கும் ஆசை வந்தது. அதன்படி இலவச வைஃபை, ஸ்மார்ட் போன் மூலமே படித்து கேரள வருவாய்த் துறையில் வேலைக்குப் போனேன். தொடர்ந்து குடிமைப் பணிக்கு படித்து வருகிறேன். அதில், 3 முறை தோல்வி அடைந்தேன். இப்போது முதல்நிலைத் தேர்வில் 82 சதவீத மதிப்பெண்ணுடன் வென்றுள்ளேன். இப்போது நடந்து வரும் முதன்மைத் தேர்வையும் எழுதி வருகிறேன். மனதில் வைராக்கியம் இருந்தால் சாதிப்பதற்கு ஏழ்மை தடையே இல்லை. இவ்வாறு ஸ்ரீநாத் உறுதியுடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT