Published : 08 Jan 2022 05:46 PM
Last Updated : 08 Jan 2022 05:46 PM
கோவா: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க விரும்பும் எந்தக் கட்சியின் ஆதரவையும் ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை பலமுனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் இந்த முறை கோவா தேர்தலில் களம் காண்கிறது. இதற்காகத் தீவிரமாகப் பணியாற்றிவரும் திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ''கோவாவில் பாஜகவைத் தோற்கடிக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று கோவா பார்வர்டு கட்சி மற்றும் காங்கிரஸுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது குறித்து பதிலளித்துள்ளார்.
மஹுவா இந்தப் பதிலை வரவேற்கும் விதமாகப் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் கோவா மாநிலத் தேர்தல் பொறுப்பாளருமான ப.சிதம்பரம், ''கூட்டணி குறித்த திரிணமூல் கட்சியின் நிலைப்பாட்டை இன்று செய்தித்தாள்களில் படித்தேன். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை நாங்கள் காத்திருப்போம். காங்கிரஸிடம் பாஜகவைத் தோற்கடிக்கும் சக்தி உள்ளது. என்றாலும் எங்களைப் போலவே பாஜகவைத் தோற்கடிக்க விரும்பும் எந்தக் கட்சியும் காங்கிரஸை ஆதரிக்க விரும்பினால், நாங்கள் அந்த ஆதரவை வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டமன்றத்தில் கடந்த 2017-ல் அதிகபட்சமாக 17 இடங்களை காங்கிரஸ் வென்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கட்சி தாவ காங்கிரஸ் அங்கு சற்று வலுவிழந்துள்ளது. எனினும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கடுமையாகப் பணியாற்றி வருகிறது.
அதேபோல் கோவாவில் முதல் முறையாகப் போட்டியிடும் திரிணமூல், மகாராஷ்டிரவாதி கோமந்தக் (எம்ஜிபி) கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காங்கிரஸும் இந்தக் கூட்டணியில் இணைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது அக்கட்சிக்குப் புது தெம்பைக் கொடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT