Published : 08 Jan 2022 12:38 PM
Last Updated : 08 Jan 2022 12:38 PM
புதுடெல்லி : பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர்,உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரைவத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 மாநிலங்களுக்கு நடக்கும் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியும், பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியும் நடக்கிறது. 5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப், உ.பி. தேர்தலைத்தான் அரசியல் பார்வையாளர்கள் பலரும் உற்றுநோக்கி வருகின்றனர். பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது அமரிந்தர்சிங், பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது அரசு எதிரான மனநிலையுடன் மக்கள் வாக்களிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருக்கிறது.
கரோனா வைரஸ் பரவலை உ.பி. அரசு கையாண்ட விதம், பெண்களின் பாதுகாப்பு , தலித் அடக்குமுறை, சிறுபான்மை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் உ.பி. தேர்தலில் எதிரொலிக்கும். சமாஜ்வாதிக் கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் பாஜகவுக்கு கடும் போட்டியளிக்க காத்திருக்கிறார்கள்.
உ.பி. தேர்தலில் பாஜக செயல்படும் விதம், பெறும் வெற்றியின் அடிப்படையில்தான் 2024 மக்களவைத் தேர்தல் அமையும் என்ற கணிப்பு இருப்பதாலும் முக்கியத்தும் பெறுகிறது. அந்த மாநிலத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 80 எம்.பி. தொகுதிகளும் உள்ளன.
கோவாவில் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தேர்தல் நடக்கலாம். கோவாவில் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, ஆனால், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் 17 இடங்களைப் பெற்றது. ஆனால், பாஜக பெரும்பான்மை கிடைக்காமலும், தனிப்பெரும் கட்சியாக இல்லாத நிலையிலும் சிறுகட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது.
அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியை உடைத்தது போன்ற செயல்களால் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் கோவாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கோவாவில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் களமிறங்குகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருக்கக் கூடும். உத்தரகாண்டில் கடந்த 2 ஆண்டுகளுக்குள் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். திரத் ராவத், திரிவேந்திர சிங் ராவத், புஷ்கர் சிங் தாமி என 3 முதல்வர்கள் வந்துவிட்டனர்.
மணிப்பூரில் கடந்த தேர்தலில் 60 இடங்களில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தபோதிலும் பாஜக சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
நாட்டில் கரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடும் தேர்தல் ஆணையம், 5 மாநிலத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை வெளியிடும் எனத் தெரிகிறது. தேர்தல் பிரச்சாரங்களையும் நேரடியாக நடத்தாமல் காணொலி மூலம் நடத்துவது, கூட்டங்களை காணொலி மூலம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவுறைகளை, வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT