Published : 08 Jan 2022 05:32 AM
Last Updated : 08 Jan 2022 05:32 AM
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் 7 நாட்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், எட்டாவது நாளில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான், முதன்முதலில் கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன்பின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஒமைக்ரான் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரான் வைரஸ், கரோனா டெல்டாவை போன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், டெல்டாவைவிட மிக வேகமான பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.
கடந்த சில நாட்களாக உலக அளவில்ஒமைக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. அதேநேரத்தில் கரோனா பாதிப்பும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரேநாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவிலும் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
அதேநேரத்தில், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், விமான போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். எட்டாவது நாளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 11-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த கட்டுப்பாடு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் அதிகம் காணப்படும் நாடுகளை இந்தியா ரிஸ்க் பட்டியலில் வைத்திருக்கிறது. தற்போது ரிஸ்க்பட்டியலில் 19 நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரகண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT