Published : 07 Jan 2022 08:07 PM
Last Updated : 07 Jan 2022 08:07 PM

'வருத்தம் இல்லை, நான் செய்தது சரியே' -'புல்லி பாய்' செயலியை உருவாக்கிய மாணவன்

முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை மோசமாக சித்தரித்து ஏலம் விடுவதாக அறிவித்த ‘புல்லி பாய்' (Bulli Bai) என்னும் செயலியை உருவாக்கிய மாணவன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் 18 வயது பெண் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 'புல்லி பாய்' செயலியை உருவாக்கிய மாணவனின் பெயர் நீரஜ் பிஷ்னோய். 21 வயதாகும் அவர், போபாலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு பிடெக் படித்து வருகிறார். அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் தங்கியிருந்த அவர் டெல்லி போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். கைதின்போது அவரிடம் இருந்த செயலியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீரஜ் பிஷ்னோய்க்கு ஏழு நாட்கள் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த விசாரணையில், 'புல்லி பாய்' செயலியை நவம்பரில் உருவாக்கி டிசம்பரில் பொதுவெளியில் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதே நீரஜ் பிஷ்னோய் மும்பை காவல்துறையை கேலி செய்வதற்காக @giyu44 என்ற ஐடி கொண்ட ட்விட்டர் பக்கத்தை ஆரம்பித்து அதில் 'ஸ்லம்பாய் போலீஸ்' என்று மும்பை காவல்துறையை கேலிசெய்து பதிவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து நீரஜ் பிஷ்னோய் அந்த ட்விட்டர் 'ஒப்புதல் வாக்குமூலம்' என்று ''தவறான நபரை கைது செய்துள்ளீர்கள், ஸ்லம்பாய் போலீஸ்... நான் தான் 'புல்லி பாய்' செயலியை உருவாக்கியவன். நீங்கள் கைது செய்த இரண்டு அப்பாவிகளுக்கும் இதில் எந்த தொடர்பும் இல்லை, அவர்களை விரைவில் விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை வைத்து போலீஸார் நீரஜ்ஜை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ''தனது செய்த செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கபோவதில்லை. எனக்கு சரி என்று நினைத்ததைச் செய்தேன்" என்று தெரிவித்ததாக முன்னணி வடஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 1-ம் தேதி ‘புல்லி பாய்' எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இணைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். முதலில் இந்த வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து பெங்களூரு விரைந்த மும்பை போலீஸார் விஷால் ஜாவை கைது செய்து, மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்துத்துவா ஆதரவாளரான விஷால் ஜா தன்னுடன் அரசியல் ரீதியாக முரண்பாடு கொண்ட பெண் ஆளுமைகளை ஏலம் விடுவதாக அறிவித்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதன்பின் 18 வயது இளம் பெண், உத்தரகாண்டைச் சேர்ந்த 21 வயது மாணவன் மயங்க் ராவல் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x