Published : 07 Jan 2022 06:44 PM
Last Updated : 07 Jan 2022 06:44 PM
புதுடெல்லி: திருப்பதி தேவஸ்தானம், ராமகிருஷ்ணா மிஷன், ஷீரடி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை உள்ளிட்டவையும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் அனுமதி பெறும் உரிமத்தை இழந்தன.
வெளிநாடுகளில் இருந்து ஒரு அமைப்பு, தனியார் தொண்டு நிறுவனம், சங்கம் ஆகியவை நிதியுதவி பெற வேண்டுமானால், உள்துறை அமைச்சகத்திடம் அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து சான்று அல்லது அங்கீகாரம் பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும்.
அந்த வகையில் ஆக்ஸ்ஃபாம் இந்தியா, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், டெல்லி ஐஐடி, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 ஆயிரம் நிறுவனங்கள் எப்சிஆர்ஏ உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி அவற்றின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களால் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற முடியாமல் இருக்கின்றன.
இந்த எண்ணிக்கையில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில், ராமகிருஷ்ணா மிஷன், ஷீரடி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை ஆகியவையும் உரிமத்தைப் புதுப்பிக்காததால் எப்சிஆர்ஏ உரிமத்தை இழந்துள்ளன.
புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில், ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவை இந்து மத அமைப்புகள் எனப் பதிவு செய்திருந்தாலும் எப்சிஆர்ஏ சட்டத்துக்குள் வந்துவிடும். இந்த 3 மத அமைப்புகளுக்கும் ஏன்எப்சிஆர்ஏ பதிவு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை உள்துறை அமைச்சகம் அளிக்கவில்லை.
கடந்த டிசம்பர் 27-ம் தேதி, கொல்கத்தாவின் மிஷன் ஆப் சாரிட்டி அமைப்பு, எப்சிஆர்ஏ உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை. புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.
திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதம் 22-ம் தேதி 2020-21ஆம் நிதியாண்டுக்கான ரிட்டர்ன் தாக்கலில் ரூ.13.4 கோடி பணம் வெளிநாடுகளில் இருந்து பெற்றதாகத் தெரிவித்துள்ளது.
ஷீரடி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை டிசம்பர் 31-ம் தேதி தாக்கல் செய்த ரிட்டர்னில் ரூ.5 கோடி வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாகப் பெற்றதாகத் தெரிவித்துள்ளது. ராமகிருஷ்ணா மிஷன் கடந்த ஆண்டில் ரூ.1.3 கோடி நன்கொடையை வெளிநாடுவாழ் பக்தர்கள் மூலம் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT