Published : 07 Jan 2022 11:40 AM
Last Updated : 07 Jan 2022 11:40 AM
புதுடெல்லி: நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10% இடங்களை ஒதுக்கி மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்த நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தள்ளிவைக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி மருத்துவர்கள் கடந்த மாதம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினராக கருதப்படுவர் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட 2 நீதிபதிகள் அமர்வு தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான சுருக்கமான வாதத்தை வெள்ளிக்கிழமை (இன்று) காலையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்யுமாறு மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அவர்கள் இடைக்கால உத்தரவிட்டனர்.
மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, அரசியல் சாசனத்தின்படி அனுமதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதேபோல், நடப்பாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வை நடத்திக் கொள்ள அனுமதியளித்த நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வரையறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிஷன்களின் பரிந்துரைகள் குறித்து மார்ச் இறுதி வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT