Published : 06 Jan 2022 07:00 PM
Last Updated : 06 Jan 2022 07:00 PM
புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைக்கு மிக அருகில் பான்காங் ஏரியில் சீனா பாலம் கட்டுவதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் சீனாவின் சட்டவிரோத கட்டுமானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "பான்காங் ஏரியில் சீனாவின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். இந்தப் பாலம் சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டப் பகுதிகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இது 60 ஆண்டு காலமாக சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்தியா ஒருபோதும் இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை ஏற்றுக்கொண்டதில்லை. தேசத்தில் நலனைப் பேணுவதிலும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் " என்று கூறினார்.
அண்மையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமரின் மவுனத்தால் எழுந்துள்ள கூச்சல் காதடைக்கச் செய்கிறது. நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் சிறப்புக்கு உரியவை” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், சீனா பாலம் கட்டுவதை ஆமோதித்துள்ள வெளியுறவுச் செயலர் அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பான்காங் ஏரிப் பாலம்: லடாக்கின் பான்காங் ஏரி சுமார் 134 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம், 270 சதுர மைல் பரப்பளவு கொண்டதாகும். இதன் 40% பரப்பளவு இந்தியாவிடமும் 50% பரப்பளவு சீனாவிடமும் உள்ளது. சுமார் 10% பரப்பளவு சர்ச்சைக்குரிய பகுதியாக நீடிக்கிறது. இந்தஏரி 8 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.இதில் 1 முதல் 4 வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவை ஆகும். அண்மைக் காலமாக பான்காங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தின் கை ஓங்கி உள்ளது.
இந்த சூழலில் சீன எல்லைக்கு உட்பட்ட பான்காங் ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் அந்த நாட்டு ராணுவம் புதிய பாலத்தை கட்டி வருகிறது
கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது சீன ராணுவம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அப்போது முதலே பான்காங் ஏரியில் பாலத்தை கட்டத் தொடங்கிவிட்டது. தற்போது பாலம் பணிகிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...