Published : 06 Jan 2022 12:02 PM
Last Updated : 06 Jan 2022 12:02 PM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீர் பயணமாக வெளிநாடு சென்றுள்ள நிலையில், ஜனவரி 2-வது வாரத்தில்தான் தாயகம் திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு திட்டங்களை வகுத்து, தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில் திடீரென ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளார். தனிப்பட்ட பயணம் காரணமாக ராகுல் காந்தி சென்றுள்ளதால், எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்பதைக் கூற காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் மறுத்துவிட்டன.
5 மாநிலத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. இந்த 5 மாநிலத் தேர்தல் என்பது, பாஜகவுக்கு மாற்றாக, எதிர்க்கும் சக்தி இருக்கிறது என்பதை நிரூபிப்பது மட்டுமின்றி, மத்தியில் ஆளும் பாஜகவுக்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் தேர்தலாகவும் இருக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஓரளவுக்கு வலுவாகத்தான் இருக்கிறது. பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டபோதிலும் அதை திடீரென முக்கிய முடிவுகள் எடுத்து அதைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
பஞ்சாப், உத்தரகாண்ட் உட்கட்சிப் பூசல் விரைவாகத் தீர்ந்ததற்கு ராகுல் காந்தி எடுத்த சில முக்கியமான முடிவுகள் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த 5 மாநிலத் தேர்தலிலும் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேதி அறிவிப்பது குறித்து மாநிலங்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திடீரென வெளிநாடு சென்றுவிட்டார். இம்மாதம் 2-வது வாரத்தில் வருவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “ராகுல் காந்தி டிசம்பர் கடைசி வாரத்தில் தனிப்பட்ட பணி காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். இந்தத் தேவையில்லாத செய்திகளை எல்லாம் சேர்த்து வதந்திகளை உருவாக்க வேண்டாம் என பாஜக ஊடகப் பிரிவு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி வெளிநாடு சென்றாலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தினசரி தொடர்பு கொண்டு பேசி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக ராகுல் காந்தி திடீரென வெளிநாடு புறப்பட்டுச் சென்று, கூட்டத்தொடர் தொடங்கும் சில நாட்களுக்கு முன் தாயகம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT