Published : 06 Jan 2022 08:05 AM
Last Updated : 06 Jan 2022 08:05 AM
புதுடெல்லி: கரோனா பரவல் காரணமாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தள்ளிவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
உ.பி., உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், கரோனா 3-வது அலை அதிகரித்து வருவதால் 5 மாநில தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஒத்தி வைப்பதை மறைமுகமாக ஆதரிக் கும் வகையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நடவடிக்கைகள் இருப் பதாக சந்தேகிக்கப்படுகிறது. காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் உ.பி. தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா வதேரா, பிரச்சாரக் கூட்டங்களை நேற்று ரத்து செய்துள்ளார்.
மேலும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங் களுக்கும் தடை விதிக்கக் கோரி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. உ.பி. மாநில காங்கிரஸ் சார்பில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் தேர்தலை ஒத்தி வைக்குமாறு கோரவில்லை. என்றாலும் அதற்கான மறைமுக வலியுறுத்தல் இக்கடிதத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “உ.பி.யில் பெண் வாக்காளர்களை குறிவைத்து பிரியங்கா தொடங்கிய பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காங்கிரஸுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்றுத் தரும் இப்பிரச்சாரத்திற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. பஞ்சாபில் சித்துவை மாநிலத் தலைவராக்கி செய்த தவறை கட்சி சரிசெய்ய விரும்புகிறது. சித்துவுக்கு பதிலாக வேறு தலைவரை நியமித்து பிரச்சாரம் செய்ய அங்கும் கட்சிக்கு அவகாசம் அவசியம். இதையே பாஜகவும் விரும்புவதாக எங்களுக்கு கிடைத்த தகவலால் அதை தேர்தல் ஆணையத்திற்கு மறைமுகமாக வலியுறுத்தி உள்ளோம்” என்றனர்.
இதனிடையே, பஞ்சாப் சுகாதார அமைச்சர் ஓ.பி.சோனி, கரோனா பரவலால் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தடை விதிப்பது அவசியம் எனக் கூறியுள்ளார். நேற்று சண்டிகரில் பேசிய அமைச்சர் சோனி, “பள்ளி, கல் லூரிகளை மூடும்போது பிரச்சாரக் கூட்டங்களையும் ரத்து செய்வது அவசியம். இதுகுறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிடாமல் பஞ்சாப் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது” என்றார்.
இதேபோன்ற எண்ணம் பாஜகவிடமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் கரோனா வேகமாகப் பரவி வரும்சூழலில் அதன் தாக்கம் டெல்லிக்கு அருகில் உள்ள உ.பி.யின் நொய்டாவிலும் உள்ளது. இதைக்காரணம் காட்டி அங்கு நடைபெறவிருந்த தனது அரசு விழாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ரத்து செய்தார்.
பஞ்சாபின் பட்டிண்டாவில் நேற்றும் பிரதமர் மோடியின் வளரச்சித் திட்ட தொடக்க விழா நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்புக் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் அவரது கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களை 5 மாநிலங் களிலும் அமல்படுத்த பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கு அக்கட்சி ஆளும் அரசுகளுக்கு மேலும் சில மாதங்கள் அவகாசம் அவசியம் என கருதப்படுகிறது. இதனால், ஐந்து மாநில தேர்தல் ஒத்திவைப்புக்கு பாஜகவும் மறைமுக ஆதரவளிப்பதாகத் தகவல் பரவியுள்ளது.
உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் விசாரித்த ஒரு பொதுநல வழக்கில், தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையை பிரதமர் மோடி மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கூறி இருந்தது.
இதனால் ஐந்து மாநில உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடிவு செய்திருந்தது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் அனைத்து அலுவலர்களும் தொடர்ந்து தீவிரப் பணியாற்ற வேண்டிய சூழலில், கரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஐந்து மாநில தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைத்து கட்சிகளும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT