Published : 05 Jan 2022 04:03 PM
Last Updated : 05 Jan 2022 04:03 PM
புதுடெல்லி: பிரதமர் மோடி பஞ்சாபில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
ஆனால் போரட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கூறியதாவது:
‘‘இன்று காலை, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த பிரதமர் பதிண்டாவில் இறங்கினார். மழை மற்றும் மோசமான தெரிவுநிலை காரணமாக, வானிலை தெளிவடைவதற்கு பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். வானிலை சீரடையாததால், அவர் சாலை வழியாக நினைவிடத்தைப் பார்வையிட முடிவு செய்ததார்.
ஆனால் 2 மணி நேரம் காத்திருந்த பிறகு
பஞ்சாப் காவல்துறை தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணிக்கத் தொடங்கினார்.
ஆனால், பஞ்சாப் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குறைபாடு காரணமாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமரின் வாகனம் மீண்டும் செல்ல முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விளக்கம் கேட்டுள்ளோம்
பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய குளறுபடியை கவனத்தில் எடுத்துள்ளோம். இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும். மாற்று பயண திட்டமாக சாலை வழியாக செல்ல நேரும் போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்’’
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT