Published : 05 Jan 2022 03:13 PM
Last Updated : 05 Jan 2022 03:13 PM
மும்பை: மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகரித்து வரும்போதிலும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டாம் என துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெருமளவில் கரோனா தொற்றும் உயர்ந்து வருகிறது.
கரோனா பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகஅளவு தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை 18,466 புதிய கரோனா வைரஸ் தொற்று பதிவானது.
முந்தைய நாளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 6,303 எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மேலும் 20 இறப்புகள் ஏற்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது மகாராஷ்டிராவில் கோவிட் -19 எண்ணிக்கையை 67,30,494 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,41,573 ஆகவும் உள்ளது.
இதையடுத்து கரோனா கட்டுப்பாடுகள் குறித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாநில அமைச்சர் ராஜேஷ் தோப் கூறுகையில் கரோனா பாசிட்டிவிட்டி விகிதம், மருத்துவமனையில் படுக்கையில் தங்கும் இடம் மற்றும் ஆக்சிஜன் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் பற்றிய முடிவுகளை அரசு எடுக்கும். தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் தேவை 700 மெட்ரிக் டன்களைத் தாண்டினால், மாநிலம் தானாகவே ஊரடங்கு சூழலுக்கு இட்டுச் செல்லும்’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT