Published : 04 Jan 2022 05:23 PM
Last Updated : 04 Jan 2022 05:23 PM
பரேலி : உத்தரப் பிரதேசம் ரேபரேலி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்காக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட மராத்தான் ஓட்டத்தில் சிறுமிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கூட்ட நெரிசலில் சிக்கியதை பாஜக கண்டித்துள்ளது. பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை ஏன் சிக்கலாக்குகிறீர்கள் என்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசம் ரேபரேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லட்கி ஹீன் லட் சக்தி ஹூன் என்று பெண் குழந்தைகளைப் போற்றும் விதத்தில் மராத்தான் ஓட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றாலும், ஒமைக்ரான பரவி வரும் இந்த நேரத்தில் சிறுமிகள் முகக்கவசம் இல்லாமல் பங்கேற்றது அதிர்ச்சியாக இருந்தது.
ஒட்டப்பந்தயம் தொடங்கியதும், சிறுமிகள், ஒருவர் மீது ஒருவர் விழுந்து திடீரென கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். பலருக்கும் காயம் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது. இந்தக் குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்து எழுந்தபோதும், ஓடியபோதும் அதை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வேடிக்கை பார்த்தவாறு இருந்தனர். சமூக விலகல், முகக்கவசம் என கரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் மராத்தான் ஓட்டம் நடந்தது.
இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக தலைவர் பிரித்தி காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி கீழே விழும் வீடியோ காட்சியை இணைத்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “ரேபரேலியிலிருந்து அதிர்ச்சியளிக்கும் வீடியோ. காங்கிரஸ் நடத்திய மராத்தான் ஓட்டத்தில் இடுபாடுகள் ஏற்படும் சூழல். பல குழந்தைகள் கீழே விழுந்தனர், காயமடைந்தனர். கடவுள் ஆசியால் குழந்தைகளுக்கு ஏதுமில்லை. உங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றக் குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடுவது சரியா பிரியங்கா காந்தி’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், “ரேபரேலியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளன. இடிபாடுகள் நடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல குழந்தைகள் விழுந்து எழுந்தனர். யாரும் உயிரிழக்கவில்லை என்பதில் சந்தோஷம். கரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன. பெண் குழந்தைகளின் வாழ்க்கையைச் சிக்கலாக்குவது சரிதானா பிரியங்கா காந்தி? கோவிட் வல்லுநர் ராகுல் காந்தி ஏன் மவுனம் காக்கிறார்” எனக் கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT