Published : 04 Jan 2022 11:06 AM
Last Updated : 04 Jan 2022 11:06 AM
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் ஜான்ஸியில் பேண்டுவாத்தியங்களுடன் ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் வந்திருந்தது. இது ஷரியத்திற்கு எதிரானது எனக் கூறி முஸ்லிம் காஜிகள் நிக்காஹ் என அழைக்கப்படும் திருமணத்தை செய்து வைக்க மறுத்துள்ளனர்.
ஜான்ஸியின் வாட்டர் டாங்க் பாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முஸ்லிம் திருமணம் நடைபெற்றது. இதற்காக அருகிலுள்ள குர்சராய் பகுதியிலிருந்து வந்த மாப்பிள்ளை ஊர்வலத்தில் பேண்டு வாத்தியங்கள் இடம் பெற்றிருந்தன.
இதற்கு ஏற்றார் போல், மாப்பிள்ளை வீட்டார் அந்த ஊர்வலத்தில் ஆடிப்பாடியும் மகிழ்ந்தபடி வந்தனர். திருமணங்களில் பேண்டுவாத்தியங்கள் இடம்பெறுவது முஸ்லிம் சட்டமான ஷரியத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.
இதனால், பேண்டுவாத்தியங்களுடனான ஊர்வலத்தை கண்டு அங்கிருந்த காஜியான ஹாபீஸ் அத்தாவுல்லா கடும் கோபம் கொண்டுள்ளார். ஷரியத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக தான் நிக்காஹ் செய்து வைக்க முடியாது எனவும் அவர் மறுத்துள்ளார்.
இதற்கு, திருமண மேடையிலிருந்து உள்ளூர்வாசிகளான சில மவுலானாக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், அங்கு சில மணிநேரம் வாக்குவாதங்களும் எழுந்துள்ளன.
பிறகு நிக்காஹ் நடத்தி வைக்கும் வேறு காஜிக்களை தேடி சென்ற பெண் வீட்டாருக்கு எவரும் கிடைக்கவில்லை. அனைவரும் அவர்களது நடவடிக்கை ஷரியத்திற்கு எதிரானது எனவும் மறுத்து விட்டனர்.
இறுதியில் பெண்ணின் மாமனான சலீமுத்தீன், காஜி ஹாபீஸ் அத்தாவுல்லாவிடம், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது ஏற்கப்பட்டு மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.25,0000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத் தொகை பெற்று அப்பகுதியின் மசூதிக்கு அளித்த பின் நிக்காஹ் நடத்தி வைக்கப்பட்டது. இதுபோல், பேண்டுவாத்தியங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டாம் என எச்சரித்ததை, மாப்பிள்ளை வீட்டார் பொருட்படுத்தாததே பிரச்சனை ஏற்பட காரணமாகி விட்டதாக பெண் வீட்டார் கவலை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT