Published : 03 Jan 2022 03:21 PM
Last Updated : 03 Jan 2022 03:21 PM

வெளிநாடுகளில் நிதி பெறத் தடை விதித்த மத்திய அரசின் செயலால் 16 மாநிலங்களில் மனிதநேய உதவிகள் செய்வது பாதிப்பு: ஆக்ஸ்ஃபாம் இந்தியா வேதனை

படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான வெளிநாடு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட அங்கீகாரத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் 16 மாநிலங்களில் நடைபெற்றுவரும் மனிதநேயம் தொடர்பான பணிகள், உதவிகள் தடைப்பட்டுள்ளன என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஒரு அமைப்பு, தனியார் தொண்டு நிறுவனம், சங்கம் ஆகியவை நிதியுதவி பெற வேண்டுமானால், உள்துறை அமைச்சகத்திடம் அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து சான்று அல்லது அங்கீகாரம் பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும்.

அந்த வகையில் ஆக்ஸ்ஃபாம் இந்தியா, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், டெல்லி ஐஐடி, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 ஆயிரம் நிறுவனங்கள் எப்சிஆர்ஏ உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி அவற்றின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களால் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற முடியவில்லை.

இதுகுறித்து ஆக்ஸ்ஃபாம் இந்தியா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''வெளிநாடுகளில் இருந்து எங்கள் அமைப்பு நிதியுதவி பெறுவதற்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அரசின் இந்த முடிவால் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் இருந்து நழுவமாட்டோம், அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகள் மீது நம்பிக்கையிருக்கிறது.

பெருந்தொற்றுக் காலத்தில் விளிம்புநிலை மக்களுக்கு உதவ வேண்டும், எங்கள் உதவியை எதிர்பார்த்திருப்பார்கள் என்பதைக் கூறி, எங்களுக்கான தடையை விலக்கிக்கொள்ளக் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தை நாங்கள் விரைவில் அணுகுவோம். இந்தத் தடையால் 16 மாநிலங்களில் நாங்கள் செய்யும் மனிதநேய உதவிகள், சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களின் நலன் சார்ந்து, அரசுடனும், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், முன்களப் பணியார்கள் ஆகியோருடன் இணைந்துதான் ஆக்ஸ்ஃபாம் இந்தியா செயல்பட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம், ஆஷா பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து ஆக்ஸ்ஃபாம் இந்தியா செயல்பட்டது.

பல்வேறு மாநிலங்களில் அரசுகளுடன் இணைந்து மக்கள் நலப் பணிகளிலும், பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்ளின் கல்வியில் விழுந்த இடைவெளியையும் நிரப்பப் பணியாற்றி வருகிறோம்.

பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம், பழங்குடியினர், அவர்களுக்கான உரிமைகளைப் பெறுதல் ஆகியவற்றிலும் ஆக்ஸ்ஃபாம் இந்தியா செயல்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அங்கிருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளையும் நாங்கள் செய்திருக்கிறோம்

மிஷன் சஞ்சீவனி திட்டத்தின் கீழ், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 6 பிளாண்ட், 12,388 உயிர் காக்கும் சிலிண்டர்களை 16 மாநிலங்களுக்கு பெருந்தொற்றுக் காலத்தில் வழங்கினோம். 9 மாநிலங்களில் உள்ள 48 ஆயிரம் ஆஷா பணியாளர்களுக்குப் பெருந்தொற்றுக் காலத்தில் பிபிடி கிட், கருவிகளைக் கையாளுதல் குறித்துப் பயிற்சி அளித்தோம், 5.76 லட்சம் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், 10 ஆயிரம் மக்களுக்குத் தேவையான ரூ.3.53 கோடி நிதியுதவி ஆகியவற்றை ஆக்ஸ்ஃபாம் இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது, ஒமைக்ரான் பரவிவருகிறது. இந்த நேரத்தில் எங்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளால் மக்களுக்குச் செய்யும் உதவிகள் தடைப்படலாம், சுகாதாரத் திட்டங்களை வலுப்படுத்தும் எங்கள் முயற்சியில் தொய்வு ஏற்படும்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததில் என்ஜிஓக்கள், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகள் அளப்பரிய பங்காற்றின என்று பிரதமர் மோடியும், உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளனர்.

புயல், வெள்ளம், நிலச்சரிவு, பூகம்பம் ஏற்பட்ட காலத்திலும் ஆக்ஸ்ஃபாம் இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. அசாம், கேரளா, உத்தரகாண்ட், பிஹார், மே.வங்கத்தில் 8 ஆயிரம் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளோம்.

சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் மக்கள், அவர்களின் குழந்தைகள் கல்விக்காகவும், பெண் குழந்தைகள் கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பழங்குடியின மக்களின் கல்விக்காகவும் நாங்கள் செயலாற்றி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் 90 ஆயிரம் குழந்தைகளின் கல்விக்காக உதவியிருக்கிறோம்.

கடந்த 1960களில் இருந்தே அமுல் நிறுவனத்துக்குத் தேவையான ஆதரவை ஆக்ஸ்ஃபாம் இந்தியா வழங்கி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவாகவும், வளரவும் ஆதரவு அளித்துள்ளோம்.

கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு உதவ மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களை அமர்த்தி, அவர்களுக்கு மருத்துவ சேவையை ஆக்ஸ்ஃபாம் இந்தியா வழங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் முழுமையான இந்திய அமைப்பாகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x