Published : 02 Jan 2022 04:34 PM
Last Updated : 02 Jan 2022 04:34 PM
புதுடெல்லி : ஒமைக்ரான் வைரஸ் லேசான அறிகுறிகளுடன், பாதிப்பு குறைவாக இருப்பதால் அது இயற்கைத் தடுப்பூசி என்று சில மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு ஆபத்தை விலைகொடுத்து வாங்காதீர்கள் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கரோனா வைரஸ்களில் உருமாற்றம் அடைந்ததில் ஒமைக்ரான் வைரஸ்தான் லேசான அறிகுறிகளுடன், பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று முதல் கட்ட ஆய்வுகளில் தெரியவருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்புக் குறைவு, உயிரிழப்பு குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாகவே ஒமைக்ரான் வைரஸை மிகுந்த அலட்சியமாகவும், அச்சமின்றியும் மக்கள் அணுகுகிறார்கள்.
மகாராஷ்டிரா சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் அளித்தபேட்டியில், “ ஒமைக்ரான் தொற்று என்பது இயற்கைத் தடுப்பூசி, லேசானஅறிகுறி, லேசான பாதிப்புடன் இருப்பதால் உடலில்நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இதுதான் கரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வரும்நிலையாகும்”எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்த கருத்து முற்றிலும் தவறானது, ஆபத்தான போக்கு என மூத்த வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் எச்சரித்துள்ளார். மத்திய அரசின் சார்ஸ் கோவிட் மரபணு பிரிவின் தலைமை ஆலோசகராக இருந்த ஜமீல் கூறுகையில் “ ஒமைக்ரான் வைரஸ்தொற்று இயற்கைத் தடுப்பூசி என்ற கருத்து ஆபத்தான சிந்தனை, பொறுப்பற்றவர்களால் பரப்பிவிடப்படும் ஆபத்தான கருத்து. இதுபோன்ற கருத்து நமக்குமே நாமே ஆறுதல்படுத்திக்கொள்ள வைக்கும், சோர்வை அதிகரிக்கும், வேறு ஏதும் செய்யமுடியாத நிலையை உருவாக்கும். ஆபத்தை விலைகொடுத்து வாங்கக்கூடாது
இந்த வைரஸைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள்தான் , நீண்டகாலப் போக்கை புரியாதவர்கள், குறைவாகப் புரிதல் உள்ளவர்கள்தான் இதுபோன்ற கருத்தைத் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவு, காற்றுமாசு, நீரிழிவு நோய் ஆகியவை அதிகமாக இருக்கும்போது மக்களை வேண்டுமென்றே வைரஸ் தொற்றுக்கு ஆளாக்குவது என்பது அறிவியலைப் பற்றியும், பொதுசுகாதாரத்தைப் பற்றியும் சரியான புரிதல் இல்லாமையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்
இந்திய பொதுச்சுகாதார அமைப்பின் தொற்றுநோய் பிரிவின் தலைவரும்,பேராசிரியருமான கிரிதரா ஆர் பாபு கூறுகையில் “ ஒமைக்ரான் தொற்று லேசான அறிகுறிகளுடன் இருக்கும், பாதிப்பு குறைவாக இருக்கும் அதற்காக இது தடுப்பூசி அல்ல. இதுவரை இந்த வைரஸால்3 பேர் உயிரிழந்துள்ளனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் அதிகரிக்கிறது.
இதுபோன்ற தவறான தகவலை நம்பாதீர்கள். தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, இயற்கைத் தடுப்பூசியால் எந்த உருமாற்ற வைரஸையும் தடுக்கவோ, பாதுகாக்கவோ முடியாது. மந்தை நோய்தடுப்பாற்றல் பற்றி கூறப்பட்டாலும், ஒமைக்ரானால் மந்தைநோய் தடுப்பாற்றல் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT