Published : 01 Jan 2022 11:38 AM
Last Updated : 01 Jan 2022 11:38 AM
பாலக்காடு: நாடு முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள். கேரளாவில் அவர்களைப் பாதுகாப்பது போன்று பாஜகவினர் நடிக்கிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கடுமையாகச் சாடினார்.
பாலக்காடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி சார்பில் நேற்று நடந்த கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால், கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது போல் நடிக்கிறார்கள்.
டெல்லியைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2015-ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் 142 ஆக இருந்த நிலையில் தற்போது 478 ஆக அதிகரித்திருக்கிறது. கிறிஸ்தவ மக்கள் மீது நாடு முழுவதும் சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
கேரளாவில் வலிமையான சமத்துவ சமுதாயம் இருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களை இங்கு நிகழ்த்த முடியாது. வெறுப்பு சம்பவங்கள் இங்கு நடக்கவும் விடமாட்டோம். பாஜகவுக்கு மாற்று இருக்கிறது என்பதை கேரளா நிரூபித்துள்ளது.
சங்பரிவார் அமைப்பின் வகுப்புவாத சித்தாந்தங்களுக்கு மாற்றாக நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பாஜகவின் வகுப்புவாத திட்டத்தை எதிர்க்க தேசத்துக்கு வலுவான சித்தாந்தம் தேவை. அந்த வலுவான சித்தாந்தம் இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டுமே உண்டு. பாஜகவைப் போன்றே நிதிக்கொள்கை கொண்ட காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு மாற்றாக வர முடியாது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, நாடு முழுவதும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு எதிராக சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கடந்த டிசம்பர் 24-ம் தேதி ஆக்ராவில் சான்ட்டா கிளாஸ் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வாரணாசியில் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை பண்டிகையைக் கொண்டாடிய நேரத்தில் அவர்களுக்குத் தொந்தரவாக ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி, மதமாற்றத்துக்கு எதிராக கோஷமிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.
ஹரியாணாவில் அம்பாலாவிலும் இதுபோன்று கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடந்தது. குருஷேத்ராவில் தேவாலயத்துக்குள் நுழைந்து கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியைத் தடுத்துள்ளனர், இந்து மத பக்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். குருகிராமில், கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்துக்குள் சங்பரிவார் அமைப்புகள் நுழைந்து இடையூறு செய்துள்ளன.
மிகப்பெரிய அளவில் மதமாற்றம் செய்வதாக கிறிஸ்தவ சமூகத்தின் மீது சங்பரிவார் அமைப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள். 75 ஆண்டுகளாக, நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து கிறிஸ்தவ சமுதாயத்தின் சதவீதம் 2.3 சதவீதம் மட்டும்தானே இருக்கிறது. எவ்வாறு அவர்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாக மதமாற்றம் செய்திருக்க முடியும்?
மருத்துவச் சேவை, கல்விச் சேவை, தொண்டுப் பணிகளில் ஈடுபடும் கிறிஸ்தவ அமைப்பினர், மிகப்பெரிய அளவில் மதமாற்றம் இத்தனை ஆண்டுகளில் செய்திருந்தால், அவர்களின் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும்தானே''.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT