Published : 01 Jan 2022 09:28 AM
Last Updated : 01 Jan 2022 09:28 AM
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வாரில் அண்மையில் தர்ம சன்சாட் என்ற பெயரில் மத மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மதகுருக்கள் பலர் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் ஐவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: தேசத்தின் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு எதுவாக இருந்தாலும் அது அந்நிய சக்திகளை ஊக்குவிக்கும். நமது இந்தியச் சமூகம் பன்முகத்தன்மை கொண்டது. இந்தச் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக விதைக்கப்படும் வன்முறை சீருடை தாங்கிய வீரர்கள், மத்திய ஆயுதப் படையினர், காவல் துறையினர் என அனைவரின் மத்தியிலும் நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கும்.
தர்ம சன்சாட் நிகழ்ச்சியின் மூன்றாம் நாளில் இந்து சாதுக்கள் சிலரின் பேச்சுக்கள் அதிர்ச்சியளிக்கிறது. இந்து தேசத்தை அமைக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்தி முஸ்லிம்களைக் கொன்று இந்து மதத்தைக் காக்க வேண்டும் என்றும் பேசியுள்ளனர்.
இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கள் பொதுவெளியில் பேசப்படுவதை ஏற்க முடியாது. இது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பேச்சு. கூடவே நம் தேசத்தின் சமூகக் கட்டமைப்பையும் கிழித்தெறியும் பேச்சு. ஒரு சாது, ராணுவத்தினரும், போலீஸாரும் ஆயுதம் ஏந்தி சஃபாயி அபியான் அதாவது வேற்று மதத்தினரை அழிக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறார். நம் சொந்த மக்களையே இன அழிப்பு செய்யச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். இது கண்டனத்துக்குரியது. ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவ்விவாகரத்தைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 26 வழக்கறிஞர் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT