Published : 01 Jan 2022 08:43 AM
Last Updated : 01 Jan 2022 08:43 AM
உத்தரபிரதேசத்தின் பள்ளி மாணவர்கள் இந்து ராஜ்ஜியத்தின் பேரில் உறுதிமொழி எடுத்த வீடியோசமூகவலைதளங்களில் வைரலாகிறது. இதுபோன்ற மதவாத நடவடிக்கைகள் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலால் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது.
பாஜக ஆளும் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இதில், பாஜக ஆட்சி தொடரவேண்டி இந்துத்துவா அமைப்புகள் பல முயற்சித்து வருகின்றன. இதற்காக அவர்களில் சிலர் மதவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரிப்பது தெரிகிறது. உ.பி.யின்சோன்பத்ராவிலுள்ள விமலா இண்டர் காலேஜ் எனும் தனியார் பள்ளியின் சில பிளஸ்-டூ மாணவர்கள், இந்து ராஜ்ஜியத்தின் பேரில் கடந்த 28-ம் தேதி உறுதிமொழி எடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ பதிவை அம்மாவட்ட இந்தி செய்தி சேனலின் ட்விட்டர் பதிவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ’இந்து ராஜ்ஜியம் அமைக்கப் போராடு, எதிர்ப்பவர்களை கொல்ல உயிரையும் தியாகம் செய்’ என அந்த மாணவர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர்.
உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் பிரச்சாரமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர்களை குறிப்பிட்டு ஆதரவுப் பேச்சுக்களும் அதில் இடம் பெற்றுள்ளன. மதவாதம் பரப்பும் வகையிலான இந்த நடவடிக்கை மீது சோன்பத்ரா போலீஸார் இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யவில்லை.
இது குறித்து `இந்து தமிழ்’ நாளேட்டிடம் சோன்பத்ரா மாவட்ட போலீஸார் கூறும்போது, ‘இதுதொடர்பான எங்கள் விசாரணையில் நடவடிக்கைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுள்ளோம். இதன் தாக்கமாக எங்கும் கலவரம் இல்லை. இந்தசம்பவத்தில் எவரும் புகார் தராததால் வழக்குகள் பதிவாகவில்லை’ எனத் தெரிவித்தனர்.
புகார் அளிக்க தேவையில்லை
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் விமலா இண்டர் காலேஜின் மேலாளரான ஜிதேந்தர்சிங் கூறும்போது, ‘கல்வி விவாத நிகழ்ச்சிக்கு என உள்ளூரின் செய்தி சேனல் சில மாணவர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்களை எந்த நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தனர் என எங்களுக்கு தெரியாது. பள்ளிக்கு வெளியே நடந்ததால் இதுதொடர்பா புகாரளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ எனத் தெரிவித்தார்.
இதேபோன்ற உறுதிமொழி மகாராஷ்டிராவின் நாக்பூரில் எடுக்கப்பட்ட வீடியோவும் சோன்பத்ராவின் செய்தி சேனலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு டெல்லியில் ஒரு பொது இடத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழி வீடியோ, டிசம்பர் 19 அன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி இருந்தது. சமீப நாட்களாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதன் பின்னணியில் உ.பி. சட்டப்பேரவை தேர்தலும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.
இதில், பாஜகவின் வெற்றிக்காக மதவாதப் பேச்சுக்களால் இந்துக்களை ஒன்றுபடுத்தி வாக்குகள் பெறும் முயற்சி பல்வேறு தரப்பினரால் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் ஹரித்துவாரில் நடைபெற்ற சாதுக்கள் மாநாட்டில், முஸ்லிம்களை கொல்ல வேண்டும்’ என்ற மதவாதப் பேச்சு எழுந்தது.
இதில், இந்துவாக மதம்மாறிய ஷியா முஸ்லீம் தலைவரான வசீம் ரிஜ்வீ உள்ளிட்ட 3 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தராகண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT