Published : 31 Dec 2021 01:33 PM
Last Updated : 31 Dec 2021 01:33 PM

புஷ்பராஜ் ஜெயின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை: உ.பி.யில் அடுத்த அதிரடி

லக்னோ: உ.பி.யில் பியூஷ் ஜெயினை தொடர்ந்து புஷ்பராஜ் ஜெயின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் பியூஷ் ஜெயின். இவர் ஓடோகெம் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் வாசன திரவியங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கான்பூர், மும்பை, குஜராத், துபாய் உட்பட பல்வேறு நகரங்களில் அவருக்கு அலுவலகங்கள் உள்ளன.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் வருமான வரித் துறை அதிகாரிகள், ஜிஎஸ்டி புலனாய்வு துறை (டிஜிஜிஐ) அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

பியூஷ் ஜெயின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், பணம்

கன்னோஜில் உள்ள அவரது பூர்விக வீடு, கான்பூர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கான்பூர் வீட்டில் ரூ.177 கோடி, கன்னோஜ் வீட்டில் ரூ.107 கோடி என இதுவரை ரூ.284 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 கிலோ தங்க நகைகளும் 250 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்டவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் நெருங்கிய கூட்டாளி என்று பாஜக குற்றம்சாட்டியது. கான்பூரில் நடைபெற்ற பேரணியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் முழுவதும் சமாஜ்வாதி கட்சி தூவிய ஊழல் வாசனையை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் புஷ்பராஜ் ஜெயின் என்றும் தவறுதலாக பாஜக ஆதரவாளர் பியஷ் ஜெயினை வருமான வரித்துறை கைது செய்து விட்டதாக அகிலேஷ் கூறியிருந்தார்.

புஷ்பராஜ் ஜெயின்

இந்தநிலையில் கன்னோஜில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயின் உட்பட பல வாசனை திரவிய வியாபாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. சமீபத்தில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவால் தொடங்கப்பட்ட ‘சமாஜ்வாதி வாசனை திரவியம்’ தயாரித்து விற்பனை செய்தவர் புஷ்பராஜ் ஜெயின் ஆவார்.

கன்னோஜ், கான்பூர், சூரத், மும்பை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அன்பான கூட்டாளி வருமான வரித்துறை என்றும் சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது.

அக்கட்சி ட்விட்டரில் “பயந்துபோன பாஜக தலைமை வெளிப்படையாக மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது.மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், தங்கள் வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள்” என்று கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x