Published : 31 Dec 2021 09:19 AM
Last Updated : 31 Dec 2021 09:19 AM
மும்பை: காலிஸ்தான் ஆதரவுக் குழுக்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் மும்பை மாநகரில் உஷார் நிலை அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) என்ற அடிப்படைவாத குழுவின் உருப்பினர் ஜஸ்வீந்தர் சிங் முல்தானி அண்மையில் கைது செய்யப்பட்டார். லூதியானா நீதிமன்ற குண்டு வெடிப்பு தொடர்பாக ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள அவர், இந்தியாவில் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் காலிஸ்தான் ஆதரவுக் குழுக்கள் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தவிர பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ள இன்னும் சில காலிஸ்தான் ஆதரவு குழுக்களும் மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் நாச வேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
அதனால் மும்பை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் கண்காணிப்பை அதிகரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ஜெர்மனி விரையும் என்ஐஏ சிறப்புக் குழு: இதற்கிடையில், ஜஸ்வீந்தர் சிங் முல்தானியிடம் விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய புலனாய்வு மையத்தின் சிறப்புக் குழு ஒன்று விரைவில் ஜெர்மனி விரையவுள்ளது. அதற்கு முன்னால் முல்தானி மீது இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "காலிஸ்தான் ஆதரவாளர்கள் பஞ்சாபில் உள்ள இளைஞர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக மூளைச் சலவை செய்கின்றனர். பஞ்சாபில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் சதி வேலை அதிகரித்து வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT