Published : 30 Dec 2021 01:06 PM
Last Updated : 30 Dec 2021 01:06 PM
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து, உரிய நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.
2022-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து காக்கவே 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போர், முன்களப் பணியாளர்களுக்கு 2022, ஜனவரி 10-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தும்போது, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆதலால், 2022-ம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் விதிகளை எவ்வாறு வகுக்கலாம், அல்லது தேர்தலை சில மாதங்களுக்குத் தள்ளிவைக்கலாமா என்பது குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனையின் போது, வாக்களிக்கும் மாநிலங்களில் தடுப்பூசி வழங்கியது, ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் கோரியது.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 2022-ம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவித்த.
தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட, தேர்தல் ஆணையம் சுஷில் சந்திரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் டிசம்பர் 28 முதல் 30 வரை உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எங்களைச் சந்தித்து, அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
2017 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகின. 2019 மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் 59% வாக்குகள் பதிவாகியிருந்தன. மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலத்தில் ஏன் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம்.
ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபாட்கள் பொருத்தப்படும். தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சுமார் 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு வசதிகள் இருக்கும்
அடுத்த ஆண்டுக்கான தேர்தல் அட்டவணையை ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.’’
இவ்வாறு சுஷில் சந்திரா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT