Published : 30 Dec 2021 12:00 PM
Last Updated : 30 Dec 2021 12:00 PM
போபால்: மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய காளிச்சரண் மகாராஜ் இன்று மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ராய்பூரில் நடந்த இரண்டு நாள் தர்ம சன்சத் (மதக் கூட்டம்) என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் இந்து துறவியான அபிஜித் சரக் என்ற காளிச்சரண் மகாராஜ் கலந்துகொண்டார். இவர் மகாராஷ்ராவின் அகோலாவின் பழைய நகரப் பகுதியான சிவாஜி நகரில் வசித்துவருபவர்.
நிகழ்ச்சியின் இறுதிநிகழ்வின் போது, காளிசரண் மகாராஜ் மகாத்மா காந்திக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது ராய்பூரில் போலீஸார் வழங்குப்பதிவு செய்தனர். அவரது கருத்துகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ''தேசத் தந்தையை அவதூறாகப் பேசியதன் மூலம் சமூகத்தில் விஷத்தைப் பரப்பி தனது நோக்கத்தில் வெற்றிபெற முடியும் என்று ஒரு நயவஞ்சகர் நினைத்தால், அது அவருடைய மாயை.'' என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்தநிலையில் காளிசரண் மகாராஜ், மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் கஜுராஹோவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பாகேஷ்வர் தாம் அருகே காளிசரண் மகாராஜ் வீட்டில் தங்கியிருந்தார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் ராய்ப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய பிரதேச போலீஸார் செய்தனர் அவர் இன்று மாலை ராய்ப்பூர் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT