Last Updated : 30 Dec, 2021 06:57 AM

24  

Published : 30 Dec 2021 06:57 AM
Last Updated : 30 Dec 2021 06:57 AM

ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல: ஆதாரங்களுடன் வெளியான ஐஐடி காலண்டரால் சர்ச்சை

புதுடெல்லி

ஆங்கிலேயர் ஆட்சியில் மொகஞ் சதாரோ மற்றும் ஹரப்பா வின் தொல்லியல் ஆய்வுகளால் பண்டைய இந்தியாவின் நாகரிகம் முதல் முறையாக வெளியானது. அந்த ஆய்வில் திராவிடர்கள், ஆரியர்கள் என 2 முக்கிய இனங்கள் இந்தியாவில் வாழ்ந்ததாக ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் திராவிடர்கள் பூர்வ குடிகள், இவர்கள் மீது வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் படையெடுத்து விரட்டிய பின் இந்தியாவில் வாழ்வதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலே வரலாற்று நூல்களில் பாடமாகவும் உள்ளது.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் கரக்பூரிலுள்ள ஐஐடி 2022-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளது. அதில் 12 மாதங்களுக்கும் படங் களுடன் 12 ஆதாரங்களுடன் ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு, ‘இந்திய ஆன்மிக அறிவு முறையில் அடிப்படை மீட்டெடுப்பு’ என்ற தலைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், வேதங்களின் ரகசியத்தை வெளிப்படுத்துவன என ஹரப்பாநாகரிகத்தை பற்றியக் குறிப்புகள் உள்ளன. மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான இதன் திட்டம் மற்றும் கட்டிடவியல் துறை மூத்த பேராசிரியர் ஜாய்சன் தயாரிப்பில் இந்த காலண்டர் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேராசிரியர் ஜாய்சன் கூறும்போது, ‘‘ஆரியர் கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது காலனி ஆதிக்கத்தில் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட கருத்து, இதற்கு அவர்கள், சம்ஸ்கிருதம் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை ஆதாரமாக்கினர். ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவின் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆன்மிக பிரிவினர். இதில் குரு பரம்பரையை சேர்ந்த மூத்தவர்களான திராவிடர்களை அவர்களது சிஷ்யப் பரம்பரையாக வளர்ந்த ஆரியர்களுடன் பிரித்து பார்ப்பது தவறு’’ என்றார்

புத்தர், அரவிந்தர், விவே கானந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்களின் கருத்துக்களுடன் காலண்டரின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த பலர் காலண்டரின் கருத்துகள் தவறு எனவும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

மும்பை ஹோமி பாபா அறி வியல் கல்வி நிறுவன பேராசிரியர் அங்கித் சுலே கூறும்போது, ‘‘ஆரியர்கள் படையெடுப்பு எனும் கருத்து 50 ஆண்டுக்கு முன்பாகவே மரணித்து விட்டது. இந்த காலண் டரை தயாரித்தவர்களுக்கு இந்திய வியலின் ஆய்வுகளில் நடப்பது என்ன என்று தெரியவில்லை’’ என்றார்.

டெல்லி பல்கலைக்கழக வரலாற்று துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் டி.கே.வெங்கட சுப்பரமணியம் கூறும்போது, ‘‘காலண்டரை மேலோட்டமாக பார்த்ததில், ஆன்மிகவாதிகளும், தேசிய வாதிகளும் கூறிய கருத்துகள் தேசியவாத விழிப்புணர்வாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக விவேகானந்தர், தேசியவாதம் மற்றும் ஆன்மிகவாதத்தையும் கலந்து கூறியகருத்து பாஜக.வுக்கு பொருந்துவதாக நினைக்கிறேன்’’ என்றார்.

ஆரியர்களும் இந்தியர்களே எனும் கருத்தை வலியுறுத்தும் முயற்சி பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இதை எதிர்ப்பவர்கள் அதிகமாக இருப்பினும், ஆதரிப்பவர்களும் கணிசமாக எண்ணிக்கையில் உள்ளனர்.

குறிப்பாக இந்த ஆய்வுகள் மத்தியில் பாஜக அரசு இருக்கும் போது மட்டும் அதிகமாகின்றன. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அமெரிக்கவாழ் இந்தியர்ராஜாராம் என்பவர் வெளியிட்டகருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த முத்திரையில் இருப்பது காளை அல்ல குதிரை என நிரூபிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x