Published : 29 Dec 2021 08:37 AM
Last Updated : 29 Dec 2021 08:37 AM
புதுடெல்லி: டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் அங்கு நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளும் அதிகரித்து வருவதால் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக, நீட் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு விரைந்து கவுன்சிலிங்கை நடத்த வலியுறுத்தி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.இந்நிலையில் காவல்துறையைக் கண்டித்து இன்று (டிச.29) போராட்டம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டம் ஏன்? முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2020-ம் ஆண்டு நடக்க இருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் வந்த நிலையில் இன்னும் கவுன்சிலிங் நடத்தப்படாமல், இடங்கள் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராகப் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால்தான் நீட் கவுன்சிலிங் தாமதமாகி வருகிறது. ஆனால், இதை உடனடியாக நடத்தக் கோரி டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அமைச்சர் கோரிக்கை: இதற்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவர்கள் பிரதிநிதிகளை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் ஜனவரி 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக மத்திய அரசு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிடும். ஆகையால் விரைவில் கலந்தாய்வு தொடங்கும் என நம்புகிறேன். என மருத்துவர்கள் டெல்லியில் உள்ள கரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடரும் போராட்டம்: பாதிக்கப்படும் மருத்துவ சேவை: மருத்துவர்களின் போராட்டம் 13வது நாளை எட்டியுள்ளது. அவர்களின் போராட்டத்துக்கு நேற்று புதிதாக பல்வேறு மருத்துவ சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளன. இதனால் இன்றும், நாளையும் தலைநகரில் மருத்துவ சேவை கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ரெஸிடென்ட் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சாஃப்டர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிஞ் மருத்துவக் கல்லூரி ஆகியனவற்றின் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிந்த் பல்லவ் பந்த் மருத்துவமனையில் நேற்று மதியம் வரை புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லை. மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ரெஸிடென்ட் மருத்துவர்கள் மத்திய சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் அவசரமில்லாத சிகிச்சைகளை நிறுத்துவோம் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் அந்த முடிவை கைவிட்டனர்.
இருப்பினும், இன்றைய போராட்டத்திற்கு பல்வேறு மருத்துவ சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்றும், நாளையும் டெல்லி முழுவதும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT