Published : 28 Dec 2021 04:19 PM
Last Updated : 28 Dec 2021 04:19 PM

அதிகரிக்கும் கரோனாவால் மீண்டும் கட்டுப்பாடுகள்: டெல்லியில் பள்ளிகள், ஜிம், திரையரங்குகளை மூட உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி: டெல்லியி்ல் கரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களை உடனடியாக மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடைகளைத் திறப்பதிலும், பொதுப் போக்குவரத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவலும், குறிப்பாக ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருவதையடுத்து, திங்கள்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை டெல்லி அரசு பிறப்பித்திருந்தது. பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதாலும் முன்னெச்சரிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன் விவரம்:

  1. மஞ்சள் எச்சரிக்கையின்படி கடைகள், அத்தியாவசிய சேவையற்றவை, ஷாப்பிங் மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை மட்டுமே ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் வரிசையில்தான் திறக்க வேண்டும்.
  2. இரவுநேர ஊரடங்கு ஒரு மணி நேரம் முன்பாகத் தொடங்குகிறது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
  3. திருமணம், இறுதிச்சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இது தவிர சமூக, அரசியல், கலாச்சார, மதரீதியான நிகழ்சிகள் நடத்தவும், கூடவும் தடை விதிக்கப்படுகிறது.
  4. அனைத்து மெட்ரோ ரயில்களிலும் 50 சதவீதப் பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆட்டோ, வாடகை கார்களில் இரு பயணிகளுக்கு மேல் அமரக்கூடாது. பேருந்துகளிலும் 50 சதவீதப் பயணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  5. காய்கறிச் சந்தைகள், மார்க்கெட் பகுதிகளில் வாரத்துக்கு ஒரு மண்டலம் வீதம் 50 சதவீதக் கடைகள் திறக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  6. ரெஸ்டாரன்ட்கள், ஹோட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களே அமர அனுமதிக்க வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஹோட்டல்கள் இயங்கலாம். மது பார்கள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கலாம்.
  7. திரையரங்குகள், கூட்ட அரங்குகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம், யோகா கூடம், பூங்காக்கள், நீச்சல் குளம், பள்ளிகள், கல்லூரிக்ள், கல்வி நிலையங்கள் திறக்க அனுமதியில்லை.
  8. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். டெல்லி அரசு அலுவலகத்திலும் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் நேரில் வந்து பணியாற்றலாம், சில துறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  9. வழிபாட்டுத் தலங்கள் திறந்திருக்கும். ஆனால், யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x