Published : 28 Dec 2021 03:38 PM
Last Updated : 28 Dec 2021 03:38 PM
புதுடெல்லி: தேர்தலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதது. ஆனால், மக்கள் சேவைக்கான நமது அர்ப்பணிப்புதான் நிலையானது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 1885-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட்டு மும்பையில் முதல் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் வழக்கறிஞர் உமேஷ் சந்திர பானர்ஜி. காங்கிரஸ் கட்சி தொடங்கி 137 ஆண்டுகள் ஆவதையடுத்து இன்று அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றிய பிறகு சோனியா காந்தி தொண்டர்களிடம் பேசியதாவது:
''தேர்தலில் தோல்வி, வெற்றி, ஏற்றம் இறக்கம் வரும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், மக்களுக்குச் செய்யும் அர்ப்பணிப்பு சேவைதான் நிலையானது. காங்கிரஸ் கட்சி வளர்த்த கொள்கைகள், சித்தாந்தங்களை ஒருபோதும் சமரசம் செய்யாது.
பல பத்தாண்டுகளாக, பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது, எப்போதும் சவால்களை எதிர்த்துப் போராடியுள்ளது. இன்று 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த, உன்னதமான மற்றும் தன்னலமற்ற இந்தியர்கள் சிலரால் வடிவமைக்கப்பட்ட, வழிநடத்தப்பட்ட மற்றும் உத்வேகம் பெற்ற எங்கள் அமைப்பின் லட்சியங்கள், மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு நாங்கள் எங்களை மீண்டும் அர்ப்பணிக்கிறோம்.
நமது சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லாத, வெறுப்பு மற்றும் தவறான சிந்தனை கொண்ட பிரிவினைவாத சித்தாந்தங்கள் நமது சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பில் இப்போது அழிவை ஏற்படுத்துகின்றன.
வரலாற்றில் இடம் பெற அவர்களுக்குத் தகுதியில்லாதபோது, அவர்கள் தங்களுக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக்கொள்ள வரலாற்றைத் திருத்துகிறார்கள். நம்முடைய மிகச்சிறப்பான நாடாளுமன்ற ஜனநாயகம் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுகிறது.
இந்த அழிவு சக்திகளுடன் காங்கிரஸ் கட்சி போராடும். நமது உறுதியான தீர்மானத்தில் எந்த சந்தேகமும் வேண்டாம். நமது புனிதமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நமது அடிப்படை நம்பிக்கைகளில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்''.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT