Published : 28 Dec 2021 01:27 PM
Last Updated : 28 Dec 2021 01:27 PM
கதுவா: வீடு திரும்புவது 2-வது பிறவி எடுப்பது போலாகும் என்று 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியா திரும்பியுள்ள காஷ்மீரைச் சேர்ந்த நபர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்தீப் சிங். 29 ஆண்டுகால பாகிஸ்தான் சிறைவாசத்திற்குப் பிறகு தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். கதுவாவின் பில்வார் பகுதியில் உள்ள தொலைதூர கிராமமான மக்வால் என்ற தன்னுடைய சொந்த கிராமத்திற்கு அவர் திரும்பியபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிய அவரை அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இனிப்புகள் வழங்கி அன்புடன் வரவேற்றனர்.
1992 டிசம்பரில் தற்செயலாக சர்வதேச எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்ற சிங் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நான்கு உளவு வழக்குகளை எதிர்கொண்டார் மற்றும் 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். வழக்கமான கடிதப் போக்குவரத்து மற்றும் இந்தியத் தூதரகத்தின் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சிங் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். டிசம்பர் 20ஆம் தேதி அன்று அமிர்தசரஸில் உள்ள வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பினார்.
இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசிய குல்தீப் சிங் கூறியதாவது:
''பாகிஸ்தான் ராணுவத்தின் வலையில் விழும் ஒவ்வொரு இந்தியரும் உளவாளியாகக் கருதப்படுவார்கள், கடுமையான சிறை தண்டனை, உடலில் உயர் மின்னழுத்த அதிர்ச்சிகள் உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். மனிதாபிமானம் காட்டப்படவில்லை. நான் ஒருபோதும் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. வீடு திரும்புவது 2-வது பிறவி எடுப்பதற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு புதிய வாழ்வு கிடைத்துள்ளது. குடும்பத்துடன் மீண்டும் இணைய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
என்னைப் போல ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இருவர் இன்னும் பாகிஸ்தான் சிறையில் தங்கள் விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் உள்ள மனநல மருத்துவமனைகளில் 10 முதல் 12 இந்தியர்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏஜென்சிகளால் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல நம் நாட்டிலும் இருக்கக்கூடும். மனிதாபிமான அடிப்படையில் இரு நாட்டுக் கைதிகளையும் விடுவிக்குமாறு இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்''.
இவ்வாறு குல்தீப் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT