Published : 28 Dec 2021 12:09 PM
Last Updated : 28 Dec 2021 12:09 PM
புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு அதிக பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த மெர்சடிஸ் நிறுவனத்தின் ரூ.12 கோடி மதிப்பிலான மேபேக் எஸ் 650 கார் வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி ஏற்கெனவே ரேஞ்ச் ரோவர் வோக், டொயோட்டாவின் லேண்ட் க்ரூசர் ஆகிய கார்களைப் பயன்படுத்திய நிலையில் தற்போது மெர்சடிஸ் காரைப் பயன்படுத்துகிறார்
இது தொடர்பாக கார் அண்ட் பைக் இணையதளம் வெளியிட்ட செய்தியில், “ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது பிரதமர் மோடி ஹைதராபாத் ஹவுஸுக்கு வந்தபோது மேபேக் எஸ் 650 காரில் வந்திறங்கினார். சமீபகாலமாக பிரதமரின் பாதுகாப்பு கான்வாயில் மேபேக் கார் இடம் பெற்றுள்ளது
மெர்சடிஸ் நிறுவனத்தின் மேபேக் எஸ் 650 வகை கார் அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது. விஆர்10 பாதுகாப்பு அம்சம் நிறைந்த இந்த காரின் விலை ரூ.10 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு சிறப்புப் பாதுகாப்புக் குழுவுடையதாகும். அவர்கள்தான் பிரதமர் மோடியின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய கார் குறித்த வேண்டுகோளை அரசிடம் வைப்பார்கள். அந்த வகையில் அதிகமான பாதுகாப்பு அம்சம் நிறைந்த மேபேக் காரை வாங்க எஸ்பிஜி பிரிவினர் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மெர்டசிஸ் மேபேக் எஸ் 650 வகை கார் 6 லிட்டர் இரட்டை டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்டது. 516 பிஹெச்பி, உச்சபட்சமாக 900 என்எம் வேகத்திலும், அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்திலும் செல்லக்கூடியது. காரின் கதவுகள் அனைத்தும் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத ஸ்டீல் தகடுகளால் உருவாக்கப்பட்டவை. கண்ணாடியிலும் புல்லட் பாய்ந்தால் உடையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
2 மீட்டர் தொலைவில் 15 கிலோ டிஎன்டி வெடிபொருள் வெடித்தாலும் காரில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் அம்சம் இந்த காரில் இருக்கிறது. காரில் உள்ள உள்ளரங்கு கதவு பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாகத் தாக்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காரின் அடிப்பாகம், கீழ்பாகம் அமைக்கப்பட்டுள்ளது. நச்சுவாயுத் தாக்குதல் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காரின் கேபினில் ஏர்-சப்லே ஏரியா தரப்பட்டுள்ளது.
காரின் எரிபொருள் நிரப்பும் கலன் எந்தவிதமான தீ விபத்தும் ஏற்படாத வகையில் சிறப்பு ரசாயனக் கலவை பூசப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கில் ஏதேனும் துளை ஏற்பட்டாலோ அது தானாகே அடைந்துவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உலோகம் போயிங் விமானத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். தற்போது இந்த காரில் பயன்படுத்தப்படுகிறது.
காரின் டயர்கள் அதிநவீனமானவை, எந்தவிதமான சேதமும் டயருக்கு ஏற்பட்டாலும் உடனடியாக அதிலிருந்து தப்பிக்கும் வகையில் இருக்கும். காரில் கால் வைக்கும் பகுதி, சொகுசான உள்பகுதி, பின்பகுதி இருக்கையை மாற்றியமைத்தல் போன்றவற்றைச் செய்ய முடியும்
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, குண்டு துளைக்காத மகிந்திரா ஸ்கார்ப்பியோ கார் பயன்படுத்தினார். பிரமதராக மோடி வந்தபின், முதலில் பிஎம்டபிள்யு 7 சீரிஸ் அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட காரைப் பயன்படுத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT