Published : 28 Dec 2021 07:55 AM
Last Updated : 28 Dec 2021 07:55 AM
திருப்பதி:ஆங்கில புத்தாண்டான ஜனவரி மாதம் 1-ம் தேதி, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு இணைய தளம் மூலம் 1,000 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
ஒரு டிக்கெட் விலை ரூ. 500. இதன் மூலம் சுவாமியை லகு தரிசனம் (சற்று தொலைவிலிருந்து) முறையில் பக்தர்கள் தரிசிக்கலாம். வரும் 13-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அன்று முதல் 22-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. இதில் வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆயிரமும், மற்றும் 14-ம் தேதி முதல் 22-ம்தேதி வரை நாள் ஒன்றுக்கு 2,000 டிக்கெட்டுகள் (ரூ.300) வீதம் இணைய தளத்தில் டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட உள்ளன. மேலும் வரும் பிப்ரவரி மாதத்தில் சுவாமி தரிசனம் செய்யவும் இன்று இணைய தளம் மூலம் பக்தர்கள் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி மாதத்தில் இலவச தரிசனம் (தர்ம தரிசனம்) செய்ய நேற்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் இணைய தளம் மூலம் 31 நாட்களுக்கு 2.60 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியான 16 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டனர்.
சிபாரிசு கடிதங்கள்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
சாமானிய பக்தர்களுக்காக ஜனவரி மாதத்தில் தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 1-ம் தேதி மற்றும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை, விஐபி பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. விஐபிக்கள் நேரடியாக வந்தால் மட்டுமே சுவாமி தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி முதல், 14-ம் தேதி வரை செய்யப்படாது. நேரில் வரும் சாமானிய பக்தர்களுக்கு உடனடியாக அறைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இலவச உணவு வழங்கப்படும். மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 18 வயதுக்குட்பட்டோர் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா இல்லை என்பதற்கான ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT