Published : 27 Dec 2021 07:13 PM
Last Updated : 27 Dec 2021 07:13 PM

இரவில் ஊரடங்கு; பகலில் பேரணி, பிரச்சாரம்: உ.பி. அரசை சாடும் பாஜக எம்.பி. வருண் காந்தி

இரவில் ஊரடங்கு; பகலில் பேரணி, பிரச்சாரம் என நடத்துவதால் ஒமைக்ரான் கட்டுப்படுத்துதல் எப்படி முழுமை பெறும் என வினவியுள்ளார் பாஜக எம்.பி. வருண் காந்தி.

அண்மைக்காலமாகவே, பாஜக எம்.பி.வருண்காந்தி தொடர்ந்து பாஜக அரசை விமர்சனம் செய்து வருகிறார். இதனால், அவர் மீது கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இன்று பதிவு செய்துள்ள ட்வீட்டில், "இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு பகலில் லட்சக்கணக்கானோரை ஒருங்கிணைத்து பேரணி நடத்துவது என்பது சாமான்யனின் புரிதலுக்கு அப்பால் இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு நாம் நேர்மையான முடிவை எட்ட வேண்டும். இப்போதைய சூழலில் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்துதல் அல்லது தேர்தல் பலத்தை நிரூபித்தல். இந்த இரண்டில் எது முக்கியம் என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பத்திரிகைக்குப் பேட்டியளித்த வருண் காந்தி, பெரும்பாலான தொற்று பரவல் பகலில் தான் நடக்கின்றன. இரவில் மக்கள் நடமாட்டம் குறைவே. ஆகையால், பகலில் சமூக, அரசியல் கூட்டங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் கரோனா பரவல் மையங்கள் உருவாவதைத் தடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வருணும் பாஜக மீதான விமர்சனமும்: அண்மைக்காலமாகவே, பாஜக எம்.பி.வருண்காந்தி தொடர்ந்து பாஜக அரசை விமர்சனம் செய்து வருகிறார். விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்திலிருந்தே பாஜக எம்.பி.வருண்காந்தி தொடர்ந்து பாஜக அரசை விமர்சனம் செய்து வருவது கட்சியினரிடையே தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகள் மீது மோதிய காரின் உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் பகிரங்கமான மத்திய அமைச்சரை குறிவைத்து குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமின்றி விவசாயிகளின் போராட்டம் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாமல் இப்பிரச்சினை முடிந்துவிடாது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இவை அனைத்தும் முற்றிலும் பாஜகவுக்கு எதிரானவையாக அமைந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் வருண்காந்தி மீது அதிருப்தி நிலவி வருகிறது.

அண்மையில் உ.பி. பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ், "இப்போதெல்லாம் வருண்காந்தி காங்கிரஸின் பாஷையில் பேசுகிறார், அவரிடம் தார்மீக நெறி என்று ஒன்று இருந்தால், ஒரு வேளை பாஜகவுக்கு எதிராக பேசுவேன் என்று மனஉறுதியோடு முடிவு செய்திருந்தால், தாராளமாக ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸுக்கோ அல்லது வேறு எங்காவது போக வேண்டும்" என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x