Published : 27 Dec 2021 05:55 PM
Last Updated : 27 Dec 2021 05:55 PM
புதுடெல்லி: நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 2022-ம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து காக்கவே 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போர், முன்களப் பணியாளர்களுக்கு 2022, ஜனவரி 10-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தும்போது, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆதலால், 2022-ம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் விதிகளை எவ்வாறு வகுக்கலாம், அல்லது தேர்தலை சில மாதங்களுக்குத் தள்ளிவைக்கலாமா என்பது குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனையின் போது, வாக்களிக்கும் மாநிலங்களில் தடுப்பூசி வழங்கியது, ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் கோரியதாக தெரிகிறது.
ஒமைக்ரான் சூழல் காரணமாக கடுமையான கோவிட் நெறிமுறையின் அவசியத்தையும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் விவாதித்ததாக தெரிகிறது.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 2022-ம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட, தேர்தல் ஆணையம் சுஷில் சந்திரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையங்கள் அடங்கிய தேர்தல் ஆணையம் டிசம்பர் 28 முதல் 30 வரை உத்தரப் பிரதேசத்துக்குச் செல்கிறது.
கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகளை ஆணையம் ஏற்கெனவே பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளது.
திங்களன்று மத்திய சுகாதார செயலாளருடனான சந்திப்புக்கு பின்பு தேர்தலின் போது படைகளை அனுப்புவது குறித்து துணை ராணுவப் படைகளின் தலைவர்களையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்திக்கின்றனர். இதன் பிறகே தேர்தல் நடத்துவது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT