Published : 27 Dec 2021 04:23 PM
Last Updated : 27 Dec 2021 04:23 PM

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுடன் முறைப்படி கூட்டணிப் பேச்சை தொடங்கினார் அமரிந்தர் சிங்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்துப் பேசிய அமரிந்தர்சிங் | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடனும், எஸ்ஏடியுடனும் முறைப்படி கூட்டணிப் பேச்சை பாஜக இன்று தொடங்கியது. புதுடெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சரான அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சித் தலைவர் அமரிந்தர் சிங், எஸ்ஏடி கட்சி எம்.பி. தின்ட்ஷா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தொடர்ந்து மோதல் நிலவியது. இருவருக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகினார். இதையடுத்து, புதிய முதல்வர் சரண்ஜித் சன்னி நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையுடன் அதிருப்தியுடன் இருந்த அமரிந்தர் சிங், கட்சியில் இணைந்து செயல்பாடாமல் ஒதுங்கி இருந்தார். இருமுறை பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அமரிந்தர் சிங் திரும்பியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரிந்தர் சிங் பஞ்சாப் மக்கள் காங்கிஸ் கட்சியை தொடங்கினார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் அமரிந்தர் சிங் முயன்றார்.

அமரிந்தர் சிங் மனைவி பிரனீத் கவுர் பாட்டியாலா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கணவர் அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியபின் அவருடனே அனைத்து இடங்களுக்கும் பிரனீத் கவுர் சென்றுவருவது காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது இதுதொடர்பாக அவரிடம் காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற முயற்சியில் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தீவரமாகச் செயல்பட்டு வருகிறார். பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அஜெய் மாகென், 1984-ம் ஆண்டு சீக்கியக் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட லலித் மாகெனின் மருமகன் அஜெய் மாகென் என்று மக்களின் கோபத்தை கொம்புசீவி விட்டுள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிளம், வேளாண் சட்டங்கள், விவசாயிகள் பிரச்சினையில் கைகழுவிச்சென்றது.

இந்தச் சூழலில் பஞ்சாப் முதல்வராக இருந்தபோது, கொள்கை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பாஜகவை கடுமையாக எதிர்த்தவர் அமரிந்தர் சிங். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் இருந்த வந்த அமரிந்தர் சிங் பாஜகவுடன் நெருக்கமாவாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ர எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மூத்த தலைவர் அமித் ஷா ஆகியோரை அவரின் இல்லத்தில் அமரி்ந்தர் சிங் இன்று சந்தித்து கூட்டணி குறித்து முறைப்படி பேசினார்.

இந்த சந்திப்புக் குறித்து பஞ்சாப் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில் “ தின்ஸா கட்சியும், அமரிந்தர் சிங்கின் கட்சியும், பாஜகவும் இணைந்து பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவி்ல் பேச்சு நடத்தப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவாகும். 3 கட்சிகளும் இணைந்துதான் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x