Published : 27 Dec 2021 04:02 PM
Last Updated : 27 Dec 2021 04:02 PM
புதுடெல்லி : நாட்டில் மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு, சேவை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், தெலங்கானா 3-வது இடத்திலும் உள்ளன என நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேசமயம், மோசமான சுகாதாரச் சேவைகளைக் கொண்டதில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்திலும், அதற்கு முன்பாக மத்தியப் பிரதேசம், பிஹார் மாநிலங்களும் உள்ளன.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 4-வது ஆண்டாக சுகாதாரக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத் துறையில் செயல்திறனை அதிகப்படுத்தும் மாநிலங்களில் கடந்த 2018-19ம் ஆண்டை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த செயல்பாடு என எடுக்கும்போது கடைசிஇடம்தான் கிடைக்கிறது.
சிறிய மாநிலங்கள் குறித்த பட்டியலில், மருத்துவம், சுகாதாரம் சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் மிசோரம் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடத்திலும் ஜம்மு - காஷ்மீர் கடைசி இடத்திலும் உள்ளன.
நிதி ஆயோக் தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்த சுகதாாரக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து 4 முறையும் கேரள மாநிலம்தான் சுகாதாரம் - மருத்துவப் பிரிவில் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மருத்துவத் துறையின் அனைத்துச் செயல்பாட்டிலும் 2019-20்-ம் ஆண்டில் கேரள முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்தில் இருந்தாலும், ஆண்டுக்கு ஆண்டு செயல்திறன் அதிகரிப்பு வரிசையில் கேரளா 12-வது இடத்திலும், தமிழகம் 8-வது இடத்திலும் உள்ளன.
தெலங்கானா மாநிலம் ஒட்டுமொத்தத்தில் 3-வது இடத்திலும் அதிகரிக்கும் செயல்திறனிலும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. மருத்துவத் துறையின் ஒட்டுமொத்தத்திலும், அதிகரிக்கும் செயல்திறன் வரிசையிலும் ராஜஸ்தான் பலவீனமாக இருக்கிறது. சிறிய மாநிலங்கள் வரிசையில் திரிபுரா, மிசாரோம் ஒட்டுமொத்தத்திலும், அதிகரிக்கும் செயல்திறனிலும் வலிமையாக உள்ளன.
சுகாதாரக் குறியீடு என்பது 24 வகையான குறியீடுகளை அடிப்படையாக வைத்து செயல்திறன் மதிப்பிடப்படுகிறது. சுகாதாரத்துறை செயல்பாடு, நிர்வாகம், தகவல் மற்றும் உள்ளீடுகள், செயலாக்கம் ஆகியவை பிரிவுகளில் கணக்கில் எடுக்கப்படும். மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலன் அமைச்சகத்துடன் இணைந்துதான் நிதி ஆயோக் இந்த அறிக்கையைத் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT