Published : 26 Dec 2021 07:51 PM
Last Updated : 26 Dec 2021 07:51 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28-ம் தேதி கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், பினா-பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பாக, ஐஐடி கான்பூரின் 54-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவது பிரதமர் கவனம் செலுத்தி வரும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். பணி முடிக்கப்பட்ட கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத் தொடக்கவிழா இத்திசையில் மற்றொரு நடவடிக்கையாகும். ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரையிலான 9 கி.மீ. தூர பிரிவு முடிக்கப்பட்டுள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பார்வையிடும் பிரதமர், ஐஐடி மெட்ரோ நிலையத்திலிருந்து கீதா நகர் வரை பயணம் மேற்கொள்வார். கான்பூரில் மொத்த மெட்ரோ ரயில் தூரம் 32 கி.மீ ஆகும். இத்திட்டம் மொத்தம் ரூ.11,000 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.
பினா-பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 356 கி,மீ தூரம் கொண்ட இத்திட்டம் ஆண்டுக்கு சுமார் 3.45 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டதாகும்.
மத்தியப் பிரதேசத்தின் பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, கான்பூரின் பங்கி வரையிலான திட்டம் ரூ.1500 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இப்பிராந்தியத்துக்கு பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்க இது உதவும்.
கான்பூர் ஐஐடி-யின் 54-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார். பட்டமளிப்பு விழாவில், அனைத்து மாணவர்களுக்கும், ஐஐடியில் தேசிய பிளாக்செயின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிடல் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த டிஜிடல் பட்டங்கள், போலியாகத் தயாரிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பானவை என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT