Last Updated : 26 Dec, 2021 07:45 AM

3  

Published : 26 Dec 2021 07:45 AM
Last Updated : 26 Dec 2021 07:45 AM

உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தள்ளிப்போகுமா? - டிசம்பர் 28 முதல் நேரில் ஆய்வு செய்த பின் ஆணையம் முடிவு

புதுடெல்லி: ஒமைக்ரான் பரவல் காரணமாக உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க டிசம்பர் 28-ல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உ.பி.க்கு செல்ல உள்ளனர்.

கரோனா பரவல் தொடர்பான ஒரு பொதுநல வழக்கில் உ.பி.யின் அலகாபாத் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு கருத்து வெளியிட்டது. அதில்,ஒமைக்ரான் பரவலால் சட்டப்பேரவை தேர்தல்களை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தது. இதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.

இதையடுத்து தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பெரிய மாநிலமான உ.பி.க்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து முடிவு எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையரான சுசில் சந்திரா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், அடுத்த வாரம் உ.பி.க்கு செல்லவிருப்பதாகத் தெரிவித்தார். உ.பி.க்கு பிறகு பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூருக்கு தேர்தல் ஆணையக் குழு நேரில் செல்லவிருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா, தமது சக ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் டிசம்பர் 28 முதல் 30 வரை உ.பி.க்கு செல்லவிருக்கிறார்.

வழக்கமாக தேர்தல் முன்பாகநடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். மற்ற 4 மாநிலங்களுக்கும் ஆணைய அதிகாரிகள் குழு சென்று வந்த பின் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும். ஏனெனில், கரோனா இரண்டாவது பரவல் அதிகரிக்க பிஹாரில் நடைபெற்ற தேர்தல் காரணம் என அப்போது புகார் எழுந்தது” என்று தெரிவித்தன.

செயலர்களுடன் ஆலோசனை

தேர்தல் ஆணைய அதிகாரிகள் 5 மாநிலங்களில் மேற்கொள்ளும் தங்கள் பயணத்தில் அவற்றின் தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இக்கூட்டங்களில் மாநில காவல்துறை இயக்குநர், மருத்துவத் துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டங்களில் ஒமைக்ரான் பரவல் அபாயம் உறுதி செய்யப்பட்டால் குறைந்தது 4 மாதங்களுக்கு 5 மாநிலங்களிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 2017-ல் உ.பி. சடடப்பேரவை தேர்தல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 9 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. பஞ்சாப், கோவா மற்றும் உத்தராகண்டில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் அறிவிப்பு ஜனவரி 5-ல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x