Published : 25 Dec 2021 05:25 PM
Last Updated : 25 Dec 2021 05:25 PM

பஞ்சாபில் புதிய திருப்பம்: டெல்லியில் போராடிய விவசாயிகள் சார்பில் புதிய அரசியல் கட்சி: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு

சண்டிகர்: விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள், ஒன்றாக இணைந்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் கட்சியை தொடங்கி போட்டியிட முடிவு செய்துள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து விவசாயிகள் டிசம்பர் 11 ஆம் தேதி சனிக்கிழமையன்று தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

இந்தநிலையில் விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள், ஒன்றாக இணைந்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் கட்சியை தொடங்கி போட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்த புதிய அரசியல் கட்சிக்கு பல்பீர் சிங் ராஜேவால் தலைமை தாங்குகிறார். இதில் மற்ற சில விவசாய அமைப்புகள் சேருவது குறித்து விரைவில் முடிவு செய்யும். விவசாய சங்க பிரதிநிதிகள் பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள் என விவசாயிகள் தலைவர்கள் அறிவித்தனர்.

மூன்று விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிட பஞ்சாப் மக்களிடம் இருந்து தனக்கு பெரும் அழுத்தம் இருப்பதாக ராஜேவால் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் ‘‘போதைப்பொருள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து இளைஞர்களின் இடம்பெயர்வு போன்ற பல பிரச்சனைகளை பஞ்சாப் எதிர்கொள்கிறது’’ எனக் கூறினார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. கூட்டணி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என விவசாய தலைவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x