Published : 26 Mar 2016 10:48 AM
Last Updated : 26 Mar 2016 10:48 AM
மாணவர் பருவத்திலேயே அரசியலுக்கு வந்து நாடு முழுவதும் பிரபலமானவர் பீமன் போஸ். இந்திய மாணவர் கூட்டமைப்பின் முதல் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநில செயலாளர் என பல பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர்.
இப்போது மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இடதுசாரிகள் – காங்கிரஸ் அணிசேர வழிவகுத்ததுடன், அந்த அணியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 75 வயதாகும் மூத்த அரசியல்வாதியான பீமன் போஸை ‘தி இந்து’வுக்காக சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலிலிருந்து:
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் எப்படி ஆளுங்கட்சியை தோற்கடிக்க முடியும்?
இது கூட்டணியே அல்ல. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக, நாங்கள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளோம். இதை கூட்டணியாக கருதக் கூடாது. சில தொகுதிகளில் திரிணமுல் காங்கிரஸ் – இடதுசாரிகள் – காங்கிரஸ் என மும்முனைப் போட்டி ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலையில்லை.
இடதுசாரி ஆட்சியைவிட வன்முறை சம்பவங்கள் குறைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டுள்ளதாகவும், இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணி நேர்மையற்ற கூட்டணி என்றும் மம்தா சொல்கிறாரே!
இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இதை அகற்றவே நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். மம்தா சொல்வது அனைத்தும் பொய். அவரது ஆட்சியில் 200 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். மேற்குவங்கத்தில் ஜனநாயகம் இல்லை. அதை மீட்கவே போராடுகிறோம். வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளதாக அவர் சொல்வதில் உண்மை இல்லை.
வன்முறை கட்டுக்குள் இருக்கிறது என்பதும் பொய். தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மேற்குவங்கத்தில்தான் அதிகம். அவர் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதாக சொல்கிறார். அதுவும் உண்மை இல்லை.
‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பணம் வாங்கும் வீடியோ வெளியானது குறித்து உங்கள் கருத்து என்ன?
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, அரசியல் கட்சியினர் நன்கொடை வாங்காமல் இருக்க முடியாது என்று நியாயப்படுத்துகின்றனர். சாரதா சிட்பண்ட் ஊழலில் சிக்கியுள்ள ஒருவருக்கு சீட் கொடுக்கிறார். இந்த வழக்கில் பாஜக-வுடன் சேர்ந்து கொண்டு முன்னேற்றம் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறார். எந்த மாதிரியான ஆட்சி நடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பாஜக-வுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?
பாஜக-வுடன் திரைமறைவில் கூட்டணி இருப்பதால்தான் சாரதா சிட் பண்ட் வழக்கில், சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை என எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்காக மாநிலங்களவையில் பாஜக-வுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து நன்றிக்கடன் செலுத்துகிறது.
எதிர்க்கட்சிகளையும் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் சிக்க வைக்கப் போவதாக மம்தா மிரட்டுகிறாரே?
அரசாங்கமே அவர்களிடம்தான் உள்ளது. ஆதாரம் இருந்தால் இப்போதே சிக்க வைக்கலாமே. அவரால் அது முடியவில்லை. சிக்க வைக்க ஒன்றுமில்லை.
மேற்குவங்க தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யப் போவதாக செய்திகள் வருகிறதே. அதனால் இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்குமா?
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதால் எங்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ‘அச்சே தின்’(நல்ல நாள்) வந்துவிட்டதாகக் கூறி மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆட்சியாகவே மத்திய அரசு இயங்கி வருகிறது. அதை மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர். எனவே, அவர் வந்து பிரச்சாரம் செய்வது எங்களுக்கு நன்மை தான். பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகம் பற்றி பேச மறுப்பு
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் தமிழக அரசியல் மற்றும் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டதற்கு, “தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க நான் பொருத்தமானவர் இல்லை என்றே கருதுகிறேன்” என்று கூறி பேச மறுத்தார்.
தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பு
மேற்குவங்க மாநில தேர்தல் சூடுபிடித்துள்ளதையடுத்து, உள்ளூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் கும்பல் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. ஒரு சில பதற்றமான பகுதிகளில் அரசியல் கொலைகள் நடந்து வருவதால், குற்றப் பின்னணி உள்ள ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும்படி, அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்பி-க்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த 31 ஆயிரம் கைது வாரண்ட்கள் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள தேர்தல் ஆணையம், இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தி, தொடர் குற்றம் புரியும் ரவுடிகளை சிறைக்கு அனுப்பி வைக்கும்படி போலீஸ் எஸ்பி-க்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT