Published : 24 Dec 2021 12:38 PM
Last Updated : 24 Dec 2021 12:38 PM
லக்னோ: ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையிலிருந்து இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 122 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 17 மாநிலங்களில், 358 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேரும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 67 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 38 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உ.பி. அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை முதல், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
மேலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் யாரும் பங்கேற்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் கையில் எடுக்க உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே மத்தியப் பிரதேச அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் அத்தியாவசியத் தேவை, மருத்துவ உதவி தவிர வேறு எந்தக் காரணத்துக்கும் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்’’ எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பரவல் 88 ஆக அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் குறித்த இன்று அந்த மாநில அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் வெளியே நடமாடும்போது கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என மாநில சுகாதாரத்துறை, கோவிட் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆதலால், புதிய கட்டுப்பாடுகளை இன்று மகாராஷ்டிர அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT