Published : 16 Jan 2014 09:10 PM
Last Updated : 16 Jan 2014 09:10 PM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
அதேநேரத்தில், ராகுல் காந்தி தலைமையிலேயே எதிர்வரும் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என்று சோனியா கூறியதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.
இதன்படி, மக்களவைக்கு அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்படுகிறார் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவு எடுக்கும் அமைப்பான அக்கட்சியின் செயற்குழு இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் கூடியது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், அதில் அறிவிக்கவுள்ள முக்கிய முடிவுகள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவிவேதி, "இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 16 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ராகுல் காந்தி குறித்து விவாதித்தோம். அவரும் பேசினார். காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோரும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரினர்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸிடம் இல்லை என்றும், வேறு சில கட்சிகள் தங்களது பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதால், அதை நாமும் செய்ய வேண்டும் என்பது இல்லை என்று கூறிவிட்டார்.
அடுத்தத் தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் எதிர்கொள்வது என்று காங்கிரஸ் தலைவர் அறிவித்தார்.
கட்சி எந்தப் பொறுப்பை வழங்கினாலும், அதை ஏற்று அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று ராகுல் காந்தி கூறினார்" என்றார் ஜனார்தன் திவிவேதி.
மோடியுடன் ராகுலை ஒப்பிட அச்சமா?
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தமது கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களே பகிரங்கமாகக் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளாராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் இந்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கட்சியில் தனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்கத் தயார் என்றும், அதில் தயக்கமு இல்லை என்றும் ராகுல் காந்தி தெளிவுபடுத்தியது, இதற்கு மேலும் வலுசேர்த்தது.
இந்த நிலையில், கட்சியின் பாரம்பரியத்தைக் காரணம் காட்டி, பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்வரவில்லை.
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் ஒப்பீடு செய்தால் ஏற்படும் விளைவுகளை மனதில் வைத்தே அவர்கள் (காங்கிரஸ்) தங்களது வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT