Published : 22 Dec 2021 04:10 PM
Last Updated : 22 Dec 2021 04:10 PM
"இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள். டிசம்பர் மாதத்துக்குள் 42 சதவீதம் மக்களுக்குதான் தடுப்பூசி செலுத்தி முடிக்க முடியும். 3-வது அலையைத் தடுக்க 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய இருக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “இந்தியாவில் பெரும்பகுதியான மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள். எப்போது இந்திய அரசு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை தொடங்கப்போகிறது” என்று கேட்டுள்ளார். இதில் 'வேக்ஸினேட் இந்தியா' என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் அளவு, செலுத்தவேண்டிய அளவு குறித்த என்.டி.டி.வி வெளியிட்ட புள்ளிவிவரத்தையும் இணைத்துள்ளார்.
அதில், “இந்தியாவில் 2021 டிசம்பர் மாதம் இறுதிவரை 42 சதவீத மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தமுடியும். நம்முடைய திட்டம் இலக்கு 3-வது அலை வராமல் தடுப்பது. 3-வது அலை வராமல் தடுக்க 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசியை 2021 டிசம்பர் மாதத்துக்குள் செலுத்த வேண்டும்.
இந்த இலக்கை அடைய நாள்தோறும் 6.10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களாக நாள்தோறும் 58 லட்சம் டோஸ் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 7 நாட்களாக பற்றாக்குறை அளவு மட்டும் நாள்தோறும் 5.52 கோடி டோஸ் தடுப்பூசி. டிசம்பர் 22 வெளியான தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில் 57 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதில் பற்றாக்குறை மட்டும் 5.53 கோடி டோஸ்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும், அப்போதுதான் 3-வது அலையிலிருந்து மக்களைக் காக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT