Published : 22 Dec 2021 07:56 AM
Last Updated : 22 Dec 2021 07:56 AM
புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசும் திமுக, அதிமுக மற்றும் பாமக எம்.பிக்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரி களின் பல்வேறு துறைகளில் தமிழ்ப் பிரிவுகள் மூடப்படும் அபாயம் தொடர்கிறது. இப்பிரச்சினை குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதவிர மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்.பி. கனிமொழி எழுதிய கடிதத்தில், “இந்தியாவில் உள்ளகல்வி நிலையங்களுள் மிகுந்தமதிப்புமிக்கது டெல்லி பல்கலைக்கழகம். இது அதன் பன்முகத் தன்மையால் அறியப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாகத்தமிழ்த் துறைக்கு பேராசிரியர்கள் நிரப்பப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக பிற கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசியர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, தமிழ்ப்பிரிவுகளை மூடும் அச்சம் தரும்சூழலுக்கு வழிவகுக்கும். டெல்லியின் மிராண்டா ஹவுஸ் கல்லூரி, லேடி ராம் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
2019-ல் கடிதம்
இதே பிரச்சினை குறித்து அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யான பி.ரவீந்திரநாத், அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதிய கடிதத்தில், “இப்பிரச்சினை குறித்து தமிழகத்தின் முந்தைய அதிமுக அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு 2019 பிப்ரவரியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதன் பிறகும் இந்தநிலை தொடர்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. டெல்லி பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரி யர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன் மத்திய கல்வியியல் நிறுவனத்தில் சுமார் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பாமகவின் மாநிலங்களவை எம்.பி.யான அன்புமணி ராமதாஸ்மத்திய அரசிடம் வலியுறுத்துகையில், “டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்களின் 4 பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், தற்போதுள்ள ஒரே பேராசிரியர் ஓரிரு மாதங்களில் ஓய்வுபெற இருப்பதாலும் அதன் தமிழ்ப் பிரிவுகள் எந்நேரமும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தயாள்சிங் கல்லூரியில் 4 ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர் நியமிக்கப்படாமல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக செயல்படும் திறந்தவெளி பிரிவின் ஒரேயொரு தமிழ்ப் பேராசிரியர் ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். அவரது பணியிடத்தை நிரப்பும் முயற்சிகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. மவுலானா அபுல் கலாம் ஆசாத்தால் 1947-ல்தொடங்கப்பட்ட மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம், மிராண்டா கல்லூரிக்கு அருகில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொது நுழைவுத்தேர்வு மூலம்சேர்க்கப்பட்டு வந்த தமிழுக்கான ஏழு மாணவர்களின் கல்வியியல் பிரிவும் கடந்த 2016 முதல் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT