Published : 21 Dec 2021 07:04 PM
Last Updated : 21 Dec 2021 07:04 PM
என் பிள்ளைகளின் இன்ஸ்டா கணக்குகள் வேவு பார்க்கப்படுவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் நடந்துவரும் ஐடி சோதனைகள் குறித்தும், அகிலேஷ் யாதவ் போன்றோர் தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் தெரிவிப்பது குறித்தும் பிரியங்கா காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, என்னுடைய குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குள் ஹேக் செய்யப்படுகின்றன. இவர்களுக்கு வேறு வேலை இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். பிரியங்காவுக்கு மிராயா வத்ரா (18), ரிஹான் வத்ரா (20) என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பிரயாக்ராஜ் நகரில் பிரதமர் மோடி தொடங்கிவைத்த நலத்திட்டங்கள் பற்றிய கேள்விக்கு, "உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றே இத்தனை நாட்களாக நான் பேசிவந்தேன். இன்று பிரதமருக்கு அது புரிந்துவிட்டது போலும். இன்று அவர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி செய்துள்ளார்.
இதை ஏன் அவர் கடந்த 5 ஆண்டுகளில் செய்யவில்லை. இப்போது தேர்தல் வருகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக அவர் செய்கிறார். ஆனால் உத்தரப் பிரதேச பெண்கள் காங்கிரஸின் லட்கி ஹூன், லாட் சக்தி ஹூன் திட்டத்தால் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்" என்று கூறினார்.
உ.பி.யின் பிரயாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,000 கோடி நிதி வழங்கினார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT