Published : 21 Dec 2021 03:10 PM
Last Updated : 21 Dec 2021 03:10 PM

பிரதமரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்: தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்கக் கோரியவருக்குக் கடும் அபராதம்: கேரள உயர் நீதிமன்றம் விளாசல்

பிரதமர் மோடி | கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்வதருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் கடும் கண்டனத்தையும் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

கரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தை நீக்கக் கோரி கோட்டயம் நகரைச் சேர்ந்த பீட்டர் மயாலிபரம்பில் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்

இந்த மனுவில், “கரோனா தடுப்பூசி சான்றிதழ் என்பது தனிநபருக்குரிய இடம். இதில் பிரதமர் படம் இருப்பது உரிமையை மீறுவதாகும். உலக நாடுகளில் வழங்கப்படும் சான்றிதழில் இதுபோன்று புகைப்படம் இருப்பதில்லை. அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்த மனு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டதாகக் கூறி கடும் கண்டனத்தை நீதிபதி பதிவு செய்தார்.

நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

''தடுப்பூசியில் பிரதமரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் எனக் கோருவது அற்பமான மனு. இந்த மனுவுக்குப் பின் கடுமையான அரசியல் நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறேன். விளம்பரத்துக்காகவே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோடி இந்த நாட்டின் பிரதமர், எந்த அரசியல் கட்சிக்கும் பிரதமர் அல்ல, சிந்தாந்தங்களைத் தாங்கியவர் அல்ல. இதுபோன்ற மனு இந்தியக் குடிமகனிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.

மனுதாரர் முதலில் பிரதமருக்கு மதிப்பளிப்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சிறிது பார்க்க வேண்டும். அரசின் கொள்கைகளை, திட்டங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்பார்ப்பார்கள். ஆனால், பிரதமரைக் குறிப்பிடும்போது, மரியாதைக்குரிய பிரதமர் என்றுதான் அழைப்பர்.

நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்புதான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆதலால், இந்த தேசம் அரசியல் வேறுபாட்டை மறந்து, பிரதமருக்கு மதிப்பளிக்கிறது. எந்தக் குடிமகனும் அரசின் கொள்கைகளை எதிர்க்கலாம். பிரதமரின் அரசியல் கண்ணோட்டத்தை எதிர்க்கலாம். இது நம்முடைய தேசத்தின் பாரம்பரியம். அது பாரம்பரியமாக இருக்க வேண்டும்.

மகாத்மா காந்தி வார்த்தைகளின்படி, வெற்றியாளர் தான் வெற்றி பெற்றதையும் தெரிந்திருக்க வேண்டும், தோல்வி அடைந்தவர் இருக்கிறார் என்பதையும் உணர வேண்டும். அதேபோன்று தோல்வி அடைந்தவர் தான் தோல்வி அடைந்துவிட்டேன் என்பதையும், வெற்றியாளர் இல்லை என்பதையும் உணர வேண்டும். அங்குதான் முரண்பாடு முடிவுக்கு வரும். பரஸ்பர மரியாதை ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அது இல்லாவிட்டால், அன்றுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள், பிரச்சினைகள், முக்கிய வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்று அற்பமான மனுவைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இதை 6 வாரங்களுக்குள் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகையை கேரள சட்ட சேவை ஆணையம் வசூலிக்க வேண்டும்''.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x