Published : 21 Dec 2021 12:22 PM
Last Updated : 21 Dec 2021 12:22 PM
புதுடெல்லி: மக்களவையில் கேள்வி நேரத்தின்போது நட்சத்திரக் குறியீடு இட்ட 20 கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும்போது அந்தக் கேள்விகளைக் கேட்ட 9 பாஜக எம்.பி.க்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இல்லை.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே நட்சத்திரக் குறியீடு இட்ட கேள்விகள் 3-வது முறையாக 20 கேள்விகள் நேற்று எடுக்கப்பட்டன. இதற்கு முன் 20 கேள்விகள் கடந்த 1972-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதியும், 2019-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதியும்தான் எடுக்கப்பட்டன. அதன்பின் 3-வது முறையாக நேற்று எடுக்கப்பட்டது.
ஆனால், நட்சத்திரக் குறியிட்ட கேள்விகளை எம்.பி.க்கள் கேட்கும்போது, அமைச்சர்கள் எழுத்துபூர்வமாக அல்லாமல் வாய்மொழியாகவே பதில் அளிப்பார்கள். அந்த நேரத்தில் கேள்வி கேட்ட எம்.பி.க்கள் முன் அறிவிப்பின்றி துணைக் கேள்விகளைக் கேட்கவும் முடியும்.
அதன்படி 20 நட்சத்திரக் கேள்விகள் மக்களவையில் எடுக்கப்பட்டு அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது கேள்விகளைக் கேட்ட எம்.பி.க்கள் யாரும் அவையில் இல்லை. இதில் 9 பாஜக எம்.பி.க்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 9 எம்.பி.க்கள் என 18 எம்.பி.க்கள் அடங்குவர்.
பாஜக சார்பில் மே.வங்க பாஜக தலைவர் எம்.பி. சுகந்தா மஜும்தார், வினோத் குமார் சோன்கர், சங்கன்னா அமரப்பா, பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் தேஜஸ்வி சூர்யா, சுனில்குமார் சிங், ரக்ஸா கட்ஸே, பிபி சவுத்ரி, சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் அவையில் இல்லை.
இந்த எம்.பி.க்கள் பெயரைக் கூறி அவைத் தலைவர் ஓம் பிர்லா அழைத்தபோது இவர்கள் யாரும் அவையில் இல்லை. பாஜக நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்கள் அவைக்குத் தவறாமல் வரவேண்டும், ஏதாவது மாற்றம் செய்தால், மக்கள் மாற்றத்தைத் தந்துவிடுவார்கள் என எச்சரித்த போதிலும் கேள்வி நேரத்தில் பாஜக எம்.பி.க்கள் இல்லை.
நட்சத்திரக் குறியிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது பாஜக எம்.பி.க்கள் ராஜேந்திர அக்ரவால், கோபால் ஷெட்டி ஆகியோர் மட்டுமே இருந்தனர். சிவசேனா, திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 9 எம்.பி.க்கள் அவையில் இல்லை.
20 நட்சத்திரக் குறியிட்ட கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த கேள்விகளைக் கேட்ட எம்.பி.க்கள் யாரும் இல்லாததால் துணைக் கேள்விகள் யாரும் கேட்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT